குப்பைகளுக்கு தீ: விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
பழனி அருகே நெய்காரபட்டியில் குளக்கரையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி பேரூராட்சி மற்றும் அ.கலையமுத்தூர் ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் இப்பகுதியில் உள்ள சர்க்கரை வண்ணான் குளத்தின் கரையில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து இரும்புகம்பி மற்றும் பிற பொருட்களை பிரிப்பதற்காக சிலர் குப்பைகளுக்கு தீவைத்து விடுகின்றனர்.
இதன் காரணமாக துர்நாற்றத்துடன் சேர்ந்து அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சிஅளிக்கிறது. மேலும் பழனியில் இருந்து நெய்க்காரபட்டி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. குளத்தின் சுற்றுச்சூழலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குளக்கரைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், குப்பை கொட்டுவதற்கு தனியாக இடத்தை ஏற்படுத்தியும் , மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து உரத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.