பழனி அருகே சட்ட விரோதமாக மண் திருட்டு: 7 வாகனங்கள் பறிமுதல்
வருவாய்த்துறை அதிகாரிகள் வந்ததை பார்த்ததும் மண் அள்ளியவர்கள் வாகனங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் , பழனி அருகே சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட 4 லாரிகள் மண் அள்ளப் பயன்படுத்திய 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழனியருகே தாதநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி மண் திருடப்படுவதாக பழனி வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் தாதநாயக்கன்பட்டி அருகே உள்ள ஐவர் மலை அடிவாரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐவர் மலை அடிவாரத்தில் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது தெரிய வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் வந்ததை பார்த்ததும் மன் அள்ளுபவர்கள் வாகனங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது மண் திருட்டுக்கு பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகள் வாகனம் 3 ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார் தப்பி சென்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.