அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பற்றி எச்.ராஜா பரபரப்பு பேட்டி
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா பழனியில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகள் 16 பேரின் சொத்து பட்டியல் வெளியிட்டார். ஆனால் இதில் உள்நோக்கம் இருக்கும் என்றும், சொத்து பட்டியல் தானே எனவும் பலர் கூறினார்கள்.
அந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் உள்ளது. குறிப்பாக ஜி-ஸ்கொயர் என்ற நிறுவனத்தை பற்றி தொடக்கத்தில் சர்ச்சை எழுந்தபோது, அந்த நிறுவனத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தற்போது ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் 142 மணி நேரம் வருமான வரி சோதனை நடந்துள்ளது. ஆனால் வருமான வரி சோதனை செய்து எங்களை மிரட்ட முடியாது என்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஜி-ஸ்கொயர் நிறுவனத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டு வருமானவரி சோதனை பற்றி எங்களுக்கு அச்சமில்லை என கூறுவதன் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது.
ஊழல் செய்பவர்கள் தமிழக மந்திரி சபையில் இருக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினால் தி.மு.க. அமைச்சர்களே இருக்க முடியாது. புதிதாக அமைச்சர்கள் ஆனவர்கள் மீதே ஊழல் உள்ளது. கடந்த 1976 ஆம் ஆண்டில் எப்படி ஊழலால் தி.மு.க. அரசு போனதோ, அதுபோல் இந்த முறையும் தி.மு.க. அரசு போகும்.
தமிழகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது போல் மதுபான ஏ.டி.எம். திறக்கப்படுவது மோசமான செயல். குடி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில் 1971 ஆம் ஆண்டில் சாராய கடைகளை திறந்துவிட்டு தமிழர்களை குடிமகன்களாக மாற்றியது தி.மு.க. தமிழக மக்களின் குடியை கெடுத்தது தான் திராவிட மாடல்.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்ன காரணத்துக்காக ஆடியோ வெளியிட்டாரோ, ஆனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை மந்திரி சபையில் இருந்து முதல்வர் எடுப்பார் என்றால், பழனிவேல் தியாகராஜன் சொன்னது உண்மை. உண்மையை சொன்னதற்காகவே எடுத்ததாக கருதப்படும். எனவே அவரின் மந்திரி சபையில் இருந்து எடுக்க கூடாது, இலாகாவையும் மாற்றவும் கூடாது என எச். ராஜா தெரிவித்தார்.