கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழையால் மரங்கள் முறிந்து, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.
கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழையால் மரங்கள் முறிந்து, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமாகவும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே விடிய விடிய காற்றுடன் கன மழை பகல் பொழுதிலும் கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கொட்டித் தீர்த்தது.
இதனால் வில்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை மற்றும் கொடைக்கானலிருந்து பழனி செல்லும் வழியில் ஆனை கிரிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் வினியோகம் தடைபட்டது.
மேலும் மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வருமாறு அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர். நகரின் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.