பழனி முருகன் கோயில் பெயரில் மோசடி: பக்தர்களுக்கு எச்சரிக்கை

Fraud in the name of Palani Murugan Temple- பழநி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பெயரில் நடக்கும் மோசடி குறித்து கவனமாக இருக்கும்படி கோயில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

Update: 2023-08-05 12:36 GMT

Fraud in the name of Palani Murugan Temple- பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். (கோப்பு படம்).

Fraud in the name of Palani Murugan Temple- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா மட்டுமின்றி முருகனுக்கு உகந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது உண்டு.

திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், பழநி முருகன் கோயில் அர்ச்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு மூலம் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பழநி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

" 0444 2890021 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டால் பழநி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழநி முருகன் கோயிலில், ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News