தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை

உண்டியலில் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளின் 119 கரன்சி நோட்டுகள் காணிக்கையாகக் கிடைத்துள்ளது

Update: 2022-01-26 11:15 GMT

பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திண்டுக்கல் மாவட்டம் ,பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் மூன்று கோடியை தாண்டியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 12ம்தேதிமுதல் 21ம் தேதி வரை தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பத்து நாட்கள் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து தைப்பூசத் திருவிழாவிற்கான உண்டியல் காணிக்கை வருவாயை அறிந்து கொள்ளும்‌வகையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த 24ம்தேதி துவங்கிய உண்டியல் எண்ணும் பணி இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் ரொக்கமாக 3 கோடியே 19லட்சத்து 60ஆயிரத்து 440ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

மேலும் தங்கம் 470கிராமும், வெள்ளி 16,608 கிராமும், சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகள் 119ம் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றும் நிறைவடையாத நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால் நாளை உண்டியல் எண்ணும் பணி மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News