புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க மாணவர்களை வற்புறுத்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழனியில் உள்ள அரசு பள்ளிகளில், பிடிஎஃப் வடிவில் உள்ள புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது

Update: 2021-09-03 13:29 GMT

புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க மாணவர்களை வற்புறுத்துவதைக் கண்டித்து பழனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர்

பழனி அரசு பள்ளிகளில் மாணவர்களின் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்க புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க மாணவர்கள் வற்புறுத்தப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் 9மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடத்தவேண்டிய பாடங்களின் தொகுப்பை முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க புத்தகங்கள் என்ற பெயரில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய மாடல் புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பழனியில் உள்ள அரசு பள்ளிகளில், 800க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட மாடல் புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் வழங்கியதுடன், அனைத்து மாணவர்களையும் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு நடத்த வேண்டிய பாடங்களின் தொகுப்பை புத்தகமாக வழங்காமல், 800க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அனைத்து பாடங்களையும்,  ஜெராக்ஸ் எடுக்கச் சொல்வதால், ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வேலையின்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது பெரிய தொகையாகும். மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் படிக்கும் பெற்றோரின் நிலை பரிதாபமாகும். அதேபோல,  மாற்றாத்திறனாளிகள் பெற்றோருக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய புத்தாக்க புத்தகங்களை அரசே இலவசமாக வழங்கவேண்டுமென‌ வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.பழனி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்‌ கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News