மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
நெய்க்காரப்பட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
நெய்க்காரப்பட்டி அருகே கே.வேலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் அகமது ரபி (வயது56) என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அநாகரிமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் தரப்பில் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அகமது ரபியை கைது செய்தனர்.