கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.
தமிழக அரசு அறிவித்துள்ள தடை அறிவிப்பு காரணமாக பாதை யாத்திரை சென்ற பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்
தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பழனி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது தொடர்ந்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி கோவிலில் வருகிற 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தடை அறிவிப்பு காரணமாக பாதை யாத்திரை சென்ற பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காரணமாக பழனியில் உள்ள சாலையோர வியாபாரிகள், சிறுவியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவிலை நம்பியே உள்ள ஏழை வியாபாரிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் தடை உத்தரவு ஏழை வியாபாரிகள் மற்றும் நலிவடைந்து மற்ற வியாபாரிகளுக்கு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.மீண்டும் ஒரு லாக்டவுன் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும், குறைந்தபட்சம் தைப்பூசத்திருவிழா முடியும் வரையிலாவது பக்தர்களுக்கு தடை என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். இதில், நகர தலைவர் சரவணன்,தொழிலதிபர் ஹரிஹரமுத்து உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.