பழனி முருகன் கோவில் ரோப்காரில் பயணிக்க முன்னுரிமை சலுகை ரத்து
புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் ரோப்காரில் பயணிக்க முன்னுரிமை சலுகை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது;
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் ரோப்காரில் பயணிக்க முன்னுரிமை சலுகை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் செல்ல குழந்தைகள், முதியோர்கள் என பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ரோப்காரில் ஒருமுறை பயணிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் சிபாரிசு கடிதத்துடன் பக்தர்கள் பலர் ரோப்காரில் பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில் ரோப்கார் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், ரோப்காரில் எந்தவித முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரோப்காரில் பயணிக்க ரூ.15 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதே கட்டண முறையை மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.