பாதயாத்திரை பக்தர்களுக்காக 14 இடங்களில் தங்கும் வசதி: கோயில் நிர்வாகம் ஏற்பாடு
இரவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது ஒளிரும் பட்டை அணிந்து குழுவாக செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்காக 14 இடங்களில் தங்கும் வசதி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சபரிமலை சீசன் என்பதால் தற்போது பழனிக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கான பாதயாத்திரை பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பக்தர்கள் கட்டணம் இல்லாமல் தங்கி கொள்ளலாம் மேலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பாதயாத்திரையாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.இரவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது ஒளிரும் பட்டை அணிந்து குழுவாக செல்ல வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.