சிறுமலை கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடிய குதிரை பொங்கல் விழா

வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும். குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படும்

Update: 2024-01-16 15:18 GMT

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை விளை நிலங்களில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு வரவும், மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து செல்லவும் குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

இது குறித்து சிறுமலையை சேர்ந்த விவசாயி கூறுகையில், மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் விளைவிக்கக்கூடிய மலை பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டுவைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம்.

மேலும் இன்று குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். எங்கள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரைகளை தெய்வமாக வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு சிறுமலையில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் வாடகை வாகனம் பிடித்து மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே சிறுமலையில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News