திண்டுக்கல் அருகே பல்கலைக்கழக அரசு விடுதி மாணவிகள் திடீர் போராட்டம்
திண்டுக்கல் அருகே பல்கலைக்கழக அரசு விடுதி மாணவிகள் சுகாதார குறைபாடு கண்டித்து திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்தி கிராமத்தை அடுத்து அம்பாத்துரையில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் சேர்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற போதும் மாணவிகளிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.௧௦ ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவிகள் தெரிவிக்கையில், தற்போது இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளோம். மாணவிகளுக்கு ரேசன் அரிசியில் தான் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் சுகாதாரமற்ற முறையில் உண்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.குடிநீர் இல்லாததால் வெளியில் இருந்து மாணவிகள் தண்ணீர் கேன்கள் விலை கொடுத்து வாங்கி வருகிறோம். கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. நாப்கின்கள் வைக்கும் எந்திரம் சுகாதாரமான முறையில் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமையலர், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் ஆகியோர் இருந்தும் அவர்களது பணியை முறையாக செய்யவில்லை. விடுதி அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இலவச விடுதியில் இவ்வாறுதான் இருக்கும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர். எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனிடையே மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்பு தாங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்ததை யடுத்து விடுதி திறக்கப்பட்டது. மாணவிகள் போராட்டத்தையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பாத்துரை போலீசார் மற்றும் ஆத்தூர் தாசில்தார் வடிவேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.