கணவன் சித்திரவதை: காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்

திண்டுக்கல்லில், திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் சித்திரவதை செய்யப்படுவதாக இளம்பெண் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்.;

Update: 2021-08-17 08:55 GMT

திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த ஜெனிபர். 

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் பால்ராஜ். இவரது மகள் ஜெனிபர் (வயது 22) இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹெர்பாட் ஃபிலிப் என்பவருக்கும் கடந்த 20.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது . திருமணத்தின் போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்தது. மேலும் பிலிப் தனது மனைவி ஜெனிபருக்கு, உடல் தகுதி இல்லை என மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளதாக தெரிகிறது .    தொடர்ந்து பிலிப் மற்றும் அவரது உறவினர்கள் ஜெனிபரை துன்புறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் வரதட்சணை கூடுதலாக கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனிடையே தலை ஆடிக்கு பெண் வீட்டிலிருந்து அழைத்து சீர்வரிசை கொடுக்காத காரணத்தைக் கூறி ஜெனிபரை அடித்து துன்புறுத்தி கடந்த 08.08.2021 அன்று ஜெனிபரின் தந்தை வீட்டில் விட்டு  சென்றுள்ளார். தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஜெனிபர் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்திற்கு கொடுத்த நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி ஜெனிபர் தனது உறவினர்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் கொடுக்க காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஜெனிபரை உடனடியாக அழைத்து விசாரித்ததோடு சம்மந்தப்பட்ட மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளரை நேரில் வரவழைத்து புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News