மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நீண்ட நாள் கோரிக்கை களை வலியுறுத்தி 2ம்நாளாக குடியேறும் போராட்டம். சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தற்போது தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, தங்களது நீண்டநாள்
கோரிக்கையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் 3000 ரூபாயும், அதேபோல் கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாயும் உயர்த்தி வழங்கிட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறை வேலை வாய்ப்புகளில் 5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். இதில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து பாதையை மாற்றி அமைத்தனர்.