திண்டுக்கல்: இரண்டு சாலை விபத்து
திண்டுக்கல்லில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் பலி. ஒருவர் படுகாயம். தாடிக்கொம்பு போலீசார் விசாரணை.;
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சக்தீஸ்வரன்(35). அதே ஊரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (27). இவர் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர்கள் இருவரும் கரூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு பாரத் பெட்ரோல் லோடு ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் வழியாக சென்றனர். அப்போது திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் அடித்ததில், அந்த லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்தீஸ்வரன் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரனை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதேபோல் திண்டுக்கல் தாடிக்கொம்பு டி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கேரளாவில் மென்பொருள் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார் இந்நிலையில் நேற்று மதுரையில் தனது நண்பரை பார்க்க சென்று விட்டு திரும்பி வரும்பொழுது திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கம்பட்டி அருகே முன்புறம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த இரு விபத்துகள் குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.