ஐந்து விவகாரங்களில் அந்தர் பல்டி.. பா.ஜ.க தடுமாறுவது ஏன்?

`முன்வைத்த காலை, பின் வைக்க மாட்டோம்’ என்றே கடந்த பத்தாண்டுக்காலத்தை ஓட்டியது மத்திய பா.ஜ.க அரசு.;

Update: 2024-09-01 06:01 GMT

`முன்வைத்த காலை, பின் வைக்க மாட்டோம்’ என்றே கடந்த பத்தாண்டுக்காலத்தை ஓட்டியது மத்திய பா.ஜ.க அரசு.

ஆனால், இன்று அந்த நிலைமை மாறி, தாங்கள் எடுத்த முடிவுகளைத் தாங்களே திரும்பப் பெற்று, `யூ-டர்ன் அரசு’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைந்து 12 வாரங்களே ஆன நிலையில், ஐந்து விவகாரங்களில் அந்தர் பல்டி அடித்திருக்கிறது மத்திய அரசு.

முதல் பல்டி: `24 மத்திய அமைச்சகங்களிலுள்ள இணை, துணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் என 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்புக்காகத் திறமையான இந்தியர்களின் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன’ என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

பொதுவாக, இந்தப் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஐ.ஏ.எஸ் அல்லாத நபர்களை, திறமையின் அடிப்படையில் நியமிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. உடனே, `இது சமூக நீதிக்கும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி மக்களுக்கும் எதிரானது’ என எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளுமே கொந்தளிக்க... பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது பல்டி: இஸ்லாமியச் செல்வந்தர்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மசூதிகள், மதரஸாக்கள் உள்ளிட்டவற்றின் பெயர்களில் தானமாக வழங்கிய அசையும், அசையாச் சொத்துகளை நிர்வகித்து வருகிறது வக்பு வாரியம். இந்த நிலையில், ‘வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்குப் பொறுப்பு, பெண்களுக்கும் இடம்’ என வக்பு வாரியச் சட்டத்தில் சுமார் 40 திருத்தங்களை மேற்கொண்டு மக்களவையில் தாக்கல் செய்தது தற்போதைய மத்திய பா.ஜ.க அரசு.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை இஸ்லாமிய அமைப்புகள், `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல் என்.டி.ஏ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், லோக் ஜன் சக்தி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுமே மிகக் கடுமையாக எதிர்த்தன.

கடந்த பத்தாண்டுகளில், பல்வேறு மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோதெல்லாம், எதையும் கண்டுகொள்ளாமல் மசோதாக்களை நிறைவேற்றிவந்த பா.ஜ.க அரசு, இந்த முறை வக்பு மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி ‘யூ-டர்ன்’ அடித்தது.

மூன்றாவது பல்டி: யூடியூப், இன்ஸ்டாகிராம், ஓடிடி உள்ளிட்ட தளங்களுக்கு சென்சார் கொண்டு வரும் வகையில், மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய ஒளிபரப்பு மசோதாவுக்கு, `இது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வேலை’ எனக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த மசோதாவையும் திரும்பப் பெற்றிருக்கிறது மோடி அரசு.

நான்காவது பல்டி: நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை விற்கும் போது, அதன் லாபத்தில் பணவீக்கத்தை நீக்கிவிட்டு, மீதமுள்ள லாபத்துக்கு மட்டும் வரி செலுத்துவதற்கு இண்டெக்ஸேஷன் முறை உதவுகிறது. அதேபோல, சொத்துகளை விற்கும்போது, நீண்டகால மூலதன ஆதாய வரியாக 20% வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், நீண்டகால மூலதன ஆதாய வரியை 12.5%-ஆகக் குறைத்து விட்டு, இண்டெக்ஸேஷன் முறையை நீக்கியது மத்திய அரசு.

எதிர்க்கட்சிகளும், கூட்டணியிலுள்ள தெலுங்கு தேசமும் `இது நடுத்தர வர்க்க மக்கள் மீதான தாக்குதல்’ என்று எதிர்த்தன. இதையடுத்து, `பட்ஜெட் போடப்பட்ட ஜூலை 23-ம் தேதிக்கு முன்பாகச் சொத்து வாங்கியவர்கள், பழைய முறை அல்லது புதிய முறை என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என்று ‘யூ-டர்ன்’ அடித்தது மத்திய அரசு.

ஐந்தாவது பல்டி: `நியாயமான சலுகைகள் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டமே தங்களுக்கு வேண்டும்’ என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், `காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்’ என வாக்குறுதி அளித்ததோடு, காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் இந்தத் திட்டத்தையும் அமல்படுத்தியது அந்தக் கட்சி.

இதனால், மத்திய அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு மத்திய பா.ஜ.க அரசின்மீது அதிருப்தி உண்டானது. இதையடுத்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யு.பி.எஸ்) என்று புதிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. `விடாப்பிடியாக இருந்த மத்திய அரசைப் பணிய வைத்து விட்டோம்’ என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டிக்கொள்கிறார்கள்.

யூ-டர்ன்களுக்குக் காரணம் யார்?

‘மத்திய அரசு, அடுத்தடுத்து தனது முடிவுகளை மாற்றிக்கொள்ளக் காரணம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பா... கூட்டணிக் கட்சிகளின் அழுத்தமா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``மக்களவையில் தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி கவிழ்ந்து விடுமோ... எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகப் பிரதமர் மோடி, தனது முடிவுகளில் இந்த யூ-டர்ன்களை எடுக்கவில்லை.

பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவே காரணமாக இருக்கிறது. எனவே, அவ்வளவு எளிதில் அவர் கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ‘தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, தன் மகன் லோகேஷுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுத் தர பா.ஜ.க-வின் உதவி தேவைப்படுகிறது. `மோடியின் ஹனுமன்’ என்று சொல்லி பீகாரில் வலம்வரும் சிராக் பஸ்வானும் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

என்.டி.ஏ ஆட்சி கவிழ்ந்தால்கூட, காங்கிரஸ் தலைமையில் `இந்தியா’ கூட்டணி ஆட்சியமைப்பது மிக மிகக் கடினமான விஷயமாக மாறியிருக்கிறது. காரணம், 29 எம்.பி-க்களைக் கையில் வைத்திருக்கும் மம்தா, `காங்கிரஸுக்கு ஆதரவு தரும் மனநிலையில் தற்போது இல்லை’ என்கிறார்கள் அவருடைய கட்சிக்காரர்கள். ஏனென்றால், கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா அரசுக்கு எதிராகக் கடுமையாகக் கொந்தளித்தார் ராகுல் காந்தி. ஆகவே, கண்ணுக்கெட்டும் தூரம் வரையில், மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க தலைமை உறுதியாக நம்புகிறது. இருந்தும், அடுத்தடுத்து முடிவுகளைத் திரும்பப் பெறுவதற்கு, மோடியின் செல்வாக்கும், பா.ஜ.க-வின் ஆதிக்கமும் கரைந்து கொண்டிருப்பது தான் காரணம்.

`400 தொகுதிகளை வென்று விடலாம்’ என்றிருந்த பா.ஜ.க-வுக்கு, பெரும்பான்மை கூடக் கிடைக்காதது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராமர் கோயில் கட்டி முடித்து விட்டதால், நீண்டகாலமாகச் செய்து வந்த அயோத்தி அரசியலும் இனி பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்காது. இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம் என்று பா.ஜ.க., வைத்திருந்த திட்டமும், பெரும்பான்மையில்லாததால் முடியாத காரியமாக மாறியிருக்கிறது.

இஸ்லாமியர்களைப் புறக்கணித்துவிட்டு பா.ஜ.க-வால் அரசியல் செய்ய முடியும். ஆனால், எஸ்.சி/எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினரை அவர்களால் புறக்கணித்துவிட்டு அரசியல் செய்ய முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ச்சியாக எஸ்.சி/எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினருக்கு ஆதரவாக முன்வைக்கும் கருத்துகள், அவர்கள் மத்தியில் பா.ஜ.க-வின் செல்வாக்கைக் குறைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் மோடியின் செல்வாக்கும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், `பிடிவாதமாக நாம் எடுக்கும் முடிவுகள் மேலும் நமது செல்வாக்கைக் குறைத்துவிடும்’ என பா.ஜ.க உணர்ந்திருக்கிறது. எனவேதான், எதிர்ப்புகள் பெரிதாவதற்கு முன்பாகவே அந்த முடிவுகளை வாபஸ் வாங்கத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க’’ என்கின்றனர்.

Tags:    

Similar News