தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.;
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, இனி 46 சதவிகிதமாக அகவிலைப்படி வழங்கப்படவிருக்கிறது.
நீண்ட நாட்களாகவே, மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3 மாத காலமாகவே, இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது நல்ல செய்தி வெளியாகலாம் என்றார்கள்.. பிறகு ஆயுதபூஜைகள் வருவதால், அதற்கு முன்பேயே அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் அதாவது, நவராத்திரி பண்டிகை என்பதால், அதற்கு முன்பேயே அகவிலைப்படி உயர்வுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அமைச்சரவை முன்கூட்டியே ஒப்புதல் வழங்கிவிட்டது..
மத்திய அரசு ஊழியர்களை போலலே தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு என்ற கோரிக்கையை தமிழக அரசு ஊழியர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஏற்கனவே, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தது. அதாவது, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.
தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 42 சதவீதம் அகவிலைப்படி 1.7.23 முதல் 46 சதவீதம் அகவிலைப்படியாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 2,546 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.