'கிரி்ப்டோகரன்சி' எனும் மாய வணிக உலகம் : சுதாரித்துக் கொண்ட மத்திய அரசு
கிரிப்டோகரன்சி எனும் மாய வணிக உலகத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளில் மத்திய அரசும், நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் ஈடுபட்டுள்ளன.
கிரிப்டோகரன்சி எனப்படும் மாய வணிக உலகத்தை ஒழுங்குபடுத்தவும், முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், தவறானவர்களிடம் முதலீடு சேர்ந்து விடாமல் தடுக்கவும் மத்திய அரசு திடமான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
கிரிப்டோகரன்சி என்ற சொல்லை கேட்டதும், பலர் அது ஏதோ தங்களுக்கு எட்டாத வணிகம், கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாத்தியமான வணிக உலகம் என்று நினைத்து விடாதீர்கள். அதாவது நமது வணிகர்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்திய 'வெள்ளைச்சிட்டை' தான் இன்று கிரிப்டோகரன்சியாக உருவெடுத்துள்ளது. கிரிப்டோகரன்சி என்ற வார்த்தை வரும் போதெல்லாம் வெள்ளைச்சிட்டையை நினைவில் கொள்ளுங்கள், இந்த செய்தி சுட்டிக்காட்டும் அத்தனை அபாயங்களும், வணிக எச்சரிக்கைகளும் உங்களுக்கு எளிதில் புரியும்.
கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி நிலையின் போது, வங்கி குறுக்கீடு இன்றி ஒருவரிடம் இருந்து ஒருவர் நேரடியாக வர்த்தகம் செய்ய உலகில் கிரிப்டோகரன்சி நடைமுறை தோன்றியது. இந்த வர்த்தகத்தில் வங்கி குறுக்கிடாது. டிஜிட்டல் முறையில் மட்டுமே கிரிப்டோகரன்ஸிகளை பறிமாறிக்கொள்ள முடியும். இதற்கென தனி உருவ அமைப்பு கூட கிடையாது. தனித்தனி நிறுவனங்கள் தனித்தனி கிரிப்டோகரன்ஸிகளை வெளியிடலாம். அதற்கேற்ப பெயர்களும் மாறிக்கொண்டிருக்கும். ஆக மொத்தமாக இவைகளை டிஜிட்டல் கரன்ஸிகள் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
தற்போது கிரிப்டோகரன்ஸி வணிக சந்தையில் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி உள்ளன. வரும் 2030ம் ஆண்டில் இந்த சந்தை 8 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் கிரிப்டோகரன்ஸி வைத்திருப்பவர்களில் 10.7 கோடி பயனாளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 2.74 கோடி பயனாளிகளுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 1.74 கோடி பயனாளிகளுடன் ரஷ்யா மூன்றாவது இடத்திலும், பிரிட்டன், கனடா, பாக்கிஸ்தான், உக்ரைன், வியட்நாம் நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
உலக அளவில் 14 ஆயிரத்து 500 கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகளவு பணம் கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. (இந்த பணம் 6 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கிரிப்டோ சொத்து கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது. விரைவில் இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயினை எட்டும் என்றும் கிரிப்டோ சொத்து கவுன்சில் மதிப்பீட்டாளர்கள் கணித்துள்ளனர்.)
உலக அளவில் எல் சால்வடார் நாடு மட்டுமே கிரிப்டோகரன்ஸிகளை வணிக பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளது. ஆனால் இந்த அனுமதி மிகப்பெரிய ஆபத்தை விளைவித்து விடும் என ஐஎம்எப்., எல்சால்வடார்நாட்டை எச்சரித்துள்ளது. இதர உலக நாடுகள் எதுவும் கிரிப்டோகரன்ஸிகளை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கவில்லை. நமது நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் நவம்பர் 29ம் தேதி இந்திய பார்லிமெண்ட் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே கிரிப்டோகரன்ஸிகளை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளை தடை செய்துள்ளன. 2018ல் மத்திய அரசு கிரிப்டோகரன்ஸிகளுக்கு விதித்த தடையை 2020ல் சுப்ரீம்கோர்ட் நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் கிப்டோகரன்சிக்கு தடை விதித்த சீனா தனக்கு என தனி கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தை தொடங்கி விட்டது. இந்திய அரசு கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தை தொடங்கவும், நாட்டில் ஏகபோகமாக பெருகி வரும் கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும் விதிமுறைகளை வகுத்து வருகிறது.
இதற்கு காரணம் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் ஒரு மாய உலகம். அதன் மதிப்பு எப்படி உயர்கிறது, எப்படி சரிகிறது என்பது யாருக்கும் தெரியாது. திடீரென ஒரு நாள் காணாமல் கூட போய் விடும். இதில் செய்யப்படும் முதலீட்டிற்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. தவிர வரம்பற்ற முறையில் முதலீடு செய்யலாம் என்பதால் கருப்பு பணம் இங்கு சென்று பதுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகும் போது ஆயுதசந்தைக்கும், போதை மருந்து கடத்தல் சந்தைக்கும், தீவிரவாதத்திற்கும் கிரிப்டோகரன்ஸிகள் சென்று சேர்ந்து விடும். அவர்களும் இதனை பயன்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளது. இன்னொரு பெரும் அபாயம் கிரிப்டோகரன்ஸி வைத்துள்ள நிறுவனத்தின் பங்கு முதலீட்டிற்கும், கிரிப்டோகரன்ஸி முதலீட்டிற்கும் தொடர்புகள் எதுவும் இல்லை. அதாவது பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் வேறு வகையாக நிர்வகிக்கப்படும். கிரிப்டோகரன்ஸி சந்தையின் ஏற்ற இறக்கம் வேறு வகையாக நிர்வகிக்கப்படும். இதனை கண்காணிக்கவோ, கேள்வி கேட்கவோ தற்போதைய நிலையில் எந்த நிர்வாக அமைப்பும், நடைமுறையும் இல்லை என்பதும் பெரும் ஆபத்தாக உள்ளது. தவிர கிரிப்டோகரன்ஸிகளை தற்போது வெளியிட்டுள்ள 6 ஆயிரம் நிறுவனங்களில் மிகப்பெரும்பாலானவை சில ஆண்டுகளில் முற்றிலும் காணாமல் போகும். மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மூடப்படும் ஒழுங்குமுறைக்கு உட்படாத சிட்பண்ட் நிறுவனங்களுக்கும், கிரிப்டோகரன்ஸிகளை வெளியிடும் நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் கடுமையான எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
கிரிப்டோகரன்ஸி தனியார் நிதிச்சந்தை என்பதால் தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலித்து விட்டு ஒரு நாள் மூடப்படுவதை போன்றே, இந்த கிரிப்டோகரன்ஸிகள் காணாமல் போகலாம். அப்படி காணாமல் போனால் முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்க வாய்ப்பு இல்லை. தற்போது உள்ள நிலையில் கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்வது பொருளாதார தற்கொலைக்கு சமம் என்றே பொருளாதா நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் தான் கிரிப்டோகரன்ஸி சந்தையை மத்திய அரசு கடுமையாக கண்டித்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்போது நடக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே கிரிப்டோகரன்ஸிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
தனியாக சீனாவை போல் இந்திய அரசும் தனியாக கிரிப்டோகரன்ஸிகளை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்திய அரசின் கிரிப்டோகரன்ஸிகள் வெளியிடப்படலாம். கிரிப்டோகரன்ஸிகள் உருவமற்றவை என்பதாலும், இதனை முழுக்க கம்ப்யூட்டர் சர்வர்களில் மட்டும் சேமிக்க முடியும் என்பதாலும், பிளாக்செயின் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் நிதிச்சந்தை என்பதாலும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது மிக, மிக கடினமான விஷயம்.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த பாலி நெட் ஒர்க் நிறுவனத்தின் 4600 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸிகளை ஹேக்கர்கள் கொள்ளையடித்து விட்டனர். இதனை சரிகட்ட பாலி நெட்ஒர்க் நிறுவனம் பெருமளவில் சிரமப்பட வேண்டி இருந்தது. தவிர ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் கிரிப்டோகரன்சிகளை சர்வதேச சந்தையில் டெண்டர் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தவும் முழு அளவில் தடை விதித்துள்ளது. கிரிப்டோகரன்ஸி தொடர்பாக 80 நாடுகளுக்கு ஐ.எம்.எப்., அறிவுரைகளை வழங்கி உள்ளது. நமது பிரதமர் மோடி சிட்னி மாநாட்டில் கிரிப்போகரன்சிகள் தவறான கைகளில் போய்விடாமல் உலக நாடுகள் கவனித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சக்திகாந்ததாஸ், 'கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதில் ஆழமான பல சிக்கல்கள் உள்ளன என மத்திய அரசை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமரை நேரடியாக சந்தித்தும் பேசியுள்ளார்.
இந்திய அரசு உருவாக்கப்போகும் அரசு கிரிப்டோகரன்ஸிகள் சந்தைப்படுத்தப்படும் போது, மேலே குறிப்பிட்ட அத்தனை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவே மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் கிரிப்டோகரன்ஸி விஷயத்தில் மிகவும் நிதானமாக அடியெடுத்து வைத்து வருகின்றன. சந்தையில் ஏற்பட்ட சரிவு: மத்திய நிதி அமைச்சர் கிரிப்டோகரன்ஸிகளை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது என்று அறிவித்ததும், இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி சந்தையான 'வஸிர்எக்ஸ்' சந்தையில் 20 சதவீதம் வரை கிரிப்டோகரன்ஸிகளின் மதிப்பு சரிந்து விட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு நிலையாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இந்தியாவில் உள்ள அத்தனை கிரிப்டோகரன்சி நாணயங்களையும் தடை செய்யும் திட்டமும் உள்ளது என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.