ஆக்சிஜன் வேணுமா? கூப்பிடுங்க 104-ஐ தமிழக அரசு அறிவிப்பு
ஆக்சிஜன் தேவைக்கு 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது.அதற்கு அவசர எண் 104 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் இலகுவாக கிடைப்பதை உறுதி செய்யவும், சிக்கல்களை தீர்க்கவும் 24 மணி நேரமும் செயல்படும் ஆக்சிஜன் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது. அதற்கான உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர எண் 104
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனை, நர்சிங் ஹோம் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும்படி கூறப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் இலகுவாக கிடைப்பதற்கு, மருத்துவ ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளுக்கு சென்று சேர தேவைப்படும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்திக்கும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உதவிக்கு உடனடியாக 104 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.