கொரோனாவோடு தப்பிக்க முயற்சி : விமான நிலையத்தில் மாணவர் சிக்கினார்
கொரோனா பாதிப்புடன் அந்தமான் செல்ல முயன்ற மாணவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.;
அந்தமானுக்கு விமானத்தில் செல்ல சென்னை விமான நிலையம் வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதால்,மாணவரின் பயணம் ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஃகோ ஏா்வேஸ் விமானம் இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் விமான நிறுவன கவுண்டரில் போா்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு,பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனா்.
அப்போது அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த அந்தமானை சோ்ந்த கல்லூரி மாணவா் மடிம் சுவாமி(21)(MADEM SWAMY) என்பவா் போா்டிங் பாஸ் வாங்க வந்தாா்.கவுண்டா் ஊழியா், அவரிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழை கேட்டு வாங்கி சரிப்பாா்த்தாா். அதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என்று இருந்தது. இதையடுத்து அவருக்கு போா்டிங் பாஸ் கொடுக்க விமான ஊழியா் மறுத்தாா். அதோடு விமான நிலைய சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுத்தாா்.
உடனடியாக சுகாதாரத்துறையினா் விரைந்து வந்து, மாணவரை விசாரித்தனா். அவா் அந்தமானில் பெற்றோரோடு வசிக்கிறாா். அவருடைய நண்பா்களை பாா்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தாா். இங்கு அவருக்கு சிறிது சளிதொல்லை இருந்தது. இதையடுத்து கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில்,கொரோனா பாசிடிவ் என்று வந்தது. இதையடுத்து மாணவா் அவசரமாக தனது சொந்த ஊரான அந்தமானுக்கு விமானத்தில் சென்றுவிட முடிவு செய்தாா். அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க சென்னை விமான நிலையம் வந்தபோது சிக்கிக்கொண்டாா்.
இதையடுத்து சுகாதாரத்துறையினா் அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடைகளை அணிவித்து, தனி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனா்.
அதோடு அந்த மாணவா் வந்து நின்ற இடம், விமான கவுண்டா் மற்றும் அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினா் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.