கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வர பொது முடக்கம் தீர்வாக அமையுமா?

கொரோனா பொது முடக்கத்திற்கான மாற்று வழிமுறைகள் குறித்து பத்திரிகையாளர் முகவை க.சிவகுமார் எழுதிய சிறப்பு கட்டுரை.

Update: 2021-05-20 17:42 GMT

பொது முடக்கத்தால் ஆள் நடமாட்டம் இன்றி  அமைதியாக காணப்படும் சாலைகள்..

கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த மே 10-ம் தேதி முதல் 14 நாள்களுக்கு தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடியபோதும், முடக்கம் கடந்த திங்கள்கிழமை முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எட்டிவிட முடியுமா? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

கடந்த மார்ச் முதல்வாரத்தில் தமிழகத்தின் தினசரி தொற்று பரவல் 500-க்குள்தான் இருந்து வந்தது. நாடு முழுவதும் இதே கால கட்டத்தில் தினசரி பரவல் 15 ஆயிரத்திற்கு குறைவாகவே இருந்து வந்தது. ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கிய தொற்று பரவல் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. தேசிய அளவில் சுமார் 4 லட்சம் வரை சென்ற தினசரி எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொற்று பரவல் அதிகரித்ததற்கு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் காரணமாகக் கூறப்பட்டாலும் தேர்தல் நடைபெறாத கர்நாடகா, டெல்லி, மராட்டிய மாநிலங்களிலும் நோய்த் தொற்று உச்சத்தை எட்டியுள்ளது ஏன் என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கொரோனா தொற்று பரிசோதனை 

கவலையளிக்கும் நிலைமை:

கொரோனாவுடன் வாழ்வதற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டியதுதான் என கைவிரித்த ஆட்சியாளர்கள் கூட தற்போது கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்து வருவதைப் பார்த்து பீதியடைந்துள்ளனர். எந்தவித கட்டணமானாலும் செலுத்துவதற்குத் தயார் என்ற நிலையில் இருக்கும் வசதி படைத்தவர்கள்கூட எதாவது ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கையாவது பெற்றுவிட வேண்டும் என போராடுகின்றனர்.

தனியார், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கைகள் பெரும்பாலும் தினமும் நிரம்பி விடுகின்றன. மேலும் பிராணவாயு தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது என்ற நிலை மாறி இந்தியாவே பல நாடுகளிடமும் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் கொரோனாவால் தினமும் இறந்து போகும் தகவல்கள் வருவதால் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. தில்லியைப் போன்ற நிலைமை தமிழகத்தில் சென்னையில் மட்டுமல்லாது, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் ஏற்பட்டுவிட்டது. அடுத்து என்னவாகப் போகிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.


பொதுமுடக்கம் ஏன்?:

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சென்று வருவதன் மூலம் பலருக்கும் நோய் பரவி வருவதே தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் எனவும் இதற்கு பொதுமுடக்கம் மட்டுமே தீர்வு என நிபுணர்கள் மட்டுமல்ல பெரும்பாலானோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் முந்தைய அரசைப் போலவே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. மே 17 முதல் மீண்டும் இணையவழி அனுமதி நடைமுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமுடக்கம் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண முடியுமா? ஒரு மாதம் முன்புவரை லட்சக் கணக்கான மக்களை கூட்டி நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது யார்? அப்போதெல்லாம் தற்போது ஆலோசனை கூறும் நிபுணர்கள் பாராமுகமாகவே இருந்தது ஏன்? என்பதுதான் பெரும்பாலான சமானிய மக்களின் கேள்விகளாக உள்ளது. பொதுமுடக்கம் மூலம் நோய்த் தொற்று குறையும் எனினும் தளர்வுகள் அறிவிக்கும் போது மீண்டும் தொற்று அதிகரிக்கவே செய்யும். எனவே பொதுமுடக்கத்தைத் தவிர்த்து மாற்று வழிகள் என்ன என்பது குறித்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, விளக்கம் அளிக்கும் நேரம் இதுவல்ல என்பதே பதிலாக இருக்கிறது.

தினமும் 30 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். இதில் எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது? எத்தனை பேருக்கு மறுக்கப்படுகிறது? மீதம் உள்ளவர்கள் அனைவரும் எவ்வாறு குணமடைகிறார்கள்? என்று விரிவாக ஆய்வு செய்தால் இப்பிரச்னையின் தோற்றுவாய் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

மருத்துவச் சிகிச்சையைவிட இந்நோய் குறித்த விழிப்புணர்வும், தொற்று அறிகுறி ஏற்பட்ட ஒரு நோயாளி ஒருநாள் கூட தாமதம் செய்யாமல் மருந்துகளையும் எடுத்துக் கொண்டாலே மருத்துவமனைக்கு வரும் நிலைக்கு தள்ளப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகு விரைவில் குறைத்துவிட முடியும். உயிரிழப்பும் குறையும் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்தாக உள்ளது.


உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?:

இது குறித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி கூறியது,

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கொரோனாவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குக் கூட திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. முன்பை விட தற்போதையை வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு வரும் அனைவருமே உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

எனவேதான் நோயாளிகளுக்கான படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. உயிரிழப்புக்கு மற்றொரு மிக முக்கிய காரணம் தொற்று ஏற்பட்டவுடன் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளாமல், சுவாசிக்கும் அளவு குறைந்து மூச்சுத் திணறல் வரை சென்ற பிறகு மருத்துமனைக்கு வருவதேயாகும். கொரோனா குறித்த அச்சத்தைப்போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொடக்க நிலையிலேயே மருந்துகளை எடுத்துக் கொள்வதும், கூடியவரை மருத்துவக் கட்டமைப்புகளை அதிகரிப்பதுதான் இப்போதைய தேவையாக உள்ளது. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்தாலும், நிலைமை அபாயகரமாகவே உள்ளது என்றார் டாக்டர் பாலாஜி.


அச்சத்தைப் போக்க நடவடிக்கை தேவை:

தொற்று அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியது,

கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தவிர்த்து விட்டு, கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கென்று தனியாக ஒரு சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும். கொரோனா நோயாளி என்றாலே ஒரு குற்றவாளியைக் கையாளுவதை போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுதான் பொதுமக்களின் அச்சத்திற்கு முதல் காரணமாக உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாநகராட்சி ஊழியர்கள் வந்துவிடுவார்களே, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பயந்து ஓடுவார்களே என்ற அச்ச உணர்வை நீக்குவதற்கு புதிய அணுகுமுறைகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக உதவி மையங்களை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும்.

இதனையடுத்து அழைத்தவரின் வீட்டிற்கே சென்று பரிசோதனைக்கான சளி, ரத்த மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். சோதனை முடிவு வரும்வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என உறுதியாகவும், கனிவாகவும் எடுத்துரைக்க வேண்டும். மேலும் அறிகுறிகளின் அடிப்படையில் மிதமான மருந்துகளையும், சத்தான உணவு வகைகளையும் உட்கொள்ள வலியுறுத்த வேண்டும். இதன்மூலம் நோயின் வீரியத்தைக் குறைக்க முடியும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நோய்த்தொற்றின் வீரியம் குறைவாக இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும், தீவிரமாக இருந்தால் அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கவும் தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.

புதிய அணுகுமுறை தேவை:

இது குறித்து சேலத்தைச் சேர்ந்த மருந்தியல் துறை மருத்துவ நிபுணர் டாக்டர் ரவி சங்கர் கூறியது,

தொற்று ஏற்பட்ட அனைவரையுமே மருத்துவனைக்கோ, பரிசோதனை மையங்களுக்கோ கண்டிப்பாக வரச் சொல்வதைக் கைவிட வேண்டும். கடந்த ஆண்டு பெற்ற அனுபவத்தின் உதவியுடன் புதிய கோணத்தில் இப்பிரச்னையை அணுக வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டவுடன் அவர்களை உடனடியாக வீட்டிலேயே தனிமைப்படுத்திட வேண்டும். மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட ஏற்பட்டவுடன் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு அவர்களையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிட வேண்டும்.

பரிசோதனையை அதிகப்படுத்தினால் தொற்று எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். எனவே இது குறித்து பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடையத் தேவை இல்லை. தொடக்க நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே உயிரிழப்பை பெருமளவு தடுத்துவிட முடியும். முறையான சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மட்டுமே இப்பிரச்னையிலிருந்து நிரந்தரமாகத் தீர்வு காண உதவும். இவ்வாறு புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதே விட்டு விட்டு பொதுமுடக்கம் மூலம் மட்டுமே நோய்தொற்று பரவலை முற்றிலுமாக குறைத்து விட முடியாது. என்றார் டாக்டர் ரவிசங்கர்.

பொதுமுடக்கம் தீர்வல்ல... நேரடி விநியோகம் தேவை:

இது குறித்து திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்கத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ஜி.வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்புக் குழு நிர்வாகி என்.துரைராஜ் ஆகியோர் கூறியது,

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்றால் சனிக்கிழமையே சந்தை, கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமையும் பொதுமுடக்கத்தில் சேர்த்தால் வெள்ளிக்கிழமை கூடும் கூட்டம் எண்ணிலடங்காது. இரவு 8 மணிக்கு கடைகளை அடைக்க உத்தரவிட்டால் 7.50 மணித்துளிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கடைகளில் அலைமோதுகிறது. திங்கட்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனைத்து கடைகளிலும் கூட்டம் கூட்டமாக கூடியதை நாம் பார்த்தோம். தற்போது 12 மணிவரை அனுமதிக்கப்பட்ட கடைகளை காலை 10 மணிவரே மட்டுமே அனுமதி என்ற புதிய அறிவிப்பால் கூட்ட நெரிசல் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர பரவலைத் தடுக்க நிச்சயமாக உதவாது. ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்கு கூடும் கூட்டத்தை தடுக்க அரசு என்ன சொல்லப் போகிறது?

இதுபோன்ற நடைமுறைக்கு ஒத்துவராத அறிவிப்புகள் மூலம் என்ன காரணத்திற்காக பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகிறதோ அதன் பயன் கேள்விக்குறியாவது மட்டுமல்ல கேளிக்கும் உள்ளாகி வருவதை காண முடிகிறது. எனவே மக்கள் கூடுவதைத் தவிர்க்க பொதுமுடக்கம் செய்வதற்கு பதிலாக எல்லா பொருள்களையும் நேரடியாக இருப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லலாம் என அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

மளிகை பொருள்கள், காய்கறி மட்டுமல்லாது மாமிசம், மீன்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட கடைகாரர்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கே எடுத்துச் சென்று வழங்குவதில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று அரசு அதிகாரிகள் கூறுவது வியப்பாக உள்ளது என்றனர்.

வீதிகள்தோறும் தள்ளுவண்டிகள், சிறிய வாகனங்களின் மூலமாக விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மூடப்பட்டுள்ள அத்தியாவசியப் பேரங்காடிகளை திறந்து தனது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருள்களை அனுப்பி வைப்பதால் என்ன பரவல் ஏற்படும். தற்போது பேரங்காடிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களும் வீதிகளில் உள்ள சந்தைக்கு வந்துதான் பொருள்களை வாங்கியாக வேண்டும். நேரக்குறைப்பைக் கைவிட்டுவிட்டு நேரடி விற்பனையை ஊக்கப்படுத்துவதன் மூலம்தான் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். முதற்கட்டமாக விற்பனையாளர்கள், பணியாளர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு செயல்படுவதன் மூலம் கொரோனா தொடர் சங்கிலி அறுந்துவிடுவதோடு மக்களின் வாழ்வாதாரச் சங்கிலியும், வணிகச் சங்கிலியும் அறுந்துவிடாமல் காப்பாற்றப்படும். பொது முடக்கம் குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை மட்டுமே கேட்டு முடிவெடுப்பதை விடுத்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

தொற்று பரவல் பிரச்னை ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் என்பதால் அவ்வப்போது பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளை விதிப்பது பின்னர் தளர்வுகளை அறிவிப்பது என்று போய்க்கொண்டே இருப்பதில் பயன் இல்லை. அன்றாடத் தொழில்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தால் மட்டுமே அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஏற்கனவே அமலில் இருந்த பல்வேறு வழிமுறைகளை மட்டும் கையாள்வதை விட்டுவிட்டு புதிய கோணத்தில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்கின்றனர் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற சமூக ஆர்வலர்கள்.

எழுத்தும் ஆக்கமும், முகவை க.சிவகுமார், பத்திரிக்கையாளர், சென்னை

mugavaishiva@gmail.com

Tags:    

Similar News