காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளர்ச்சி பெறவில்லை: பாஜக குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜ சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது;
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளர்ச்சி பெறவில்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகில் முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார் பாஜக மாநில செயலர் வினோஜ் பி. செல்வம்.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜ சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திலகர்திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் புரட்சிக் கவிதாசன், மாவட்ட பார்வையாளர் செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் பேசுகையில், நாட்டின் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை வெளியுலகுக்கு கூறியவர் பிரதமர் மோடி மட்டுமே. தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பாராளுமன்றத்தில் செங்கோல் அமைத்தார். ஆனால், தமிழகத்தில் சிலர் அதற்கு எதிராக பேசுகின்றனர். அம்மன்காசு அச்சடித்து வெளியிட்ட தொண்டமான் ஆட்சி செய்த மாளிகையில் வசித்து வரும் ஆட்சியர், விநாயகர் சிலை விவகாரத்தில் செய்தது சரியல்ல. மன்னர்கள் மாளிகையில் வசிப்பதற்கு பதிலாக வெளியே போய் வசிக்கலாம்.
வேங்கைவயல் விவகாரத்தில் 150 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் 2 அமைச்சர்கள் கோபாலபுரத்தில் காத்து கிடக்கின்றனர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளர்ச்சி பெறவில்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகில் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதற்கு பிரதமர் மோடி தான் காரணம். புதுக்கோட்டை மண் ஜல்லிக்கட்டு பிறந்த மண். ஆனால், இங்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்து ஏற்பாடு நடைபெறுகிறது. உண்மையில் ஜல்லிக்கட்டு தடைகளை உடைத்தெறிந்த கட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக மட்டுமே என்றார் வினோஜ் பி.செல்வம்.
தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், வாரிசு அரசியல், குடும்ப அரசியலை புறந் தள்ளியவர் பிரதமர் மோடி. சாமானிய மக்களுக்கும் அரசின் திட்டத்துக்கான நிதி நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டவர். நாடு வளர்ச்சி பெற மக்கள் பாஜவை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். முன்னதாக மாவட்டச்செயலர் குருஸ்ரீராம் வரவேற்றார். நகரத்தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.