பில்லியனர்களை உருவாக்கிய கொரோனா.. இன்னும் பரிதவிக்கும் மக்கள்
கொரோனா வைரஸ் மருந்து நிறுவனங்களை சேர்ந்த பலரை பில்லியனர்களாக உருமாற்றி விட்டது. இன்னும் தடுப்பூசியில் சமத்துவமின்மை நிலவுகிறது.;
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று துவங்கியதிலிருந்து இதற்கெதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 9 பேர் இன்றைக்கு புதிய பில்லியனர்களாக மகா கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் செல்வந்தர்கள் பட்டியல் தெரிவிக்கிறது.
இந்தப் புதிய பில்லியனர்களின் ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பு 19.3 பில்லியன் டாலர்கள் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்களது இந்த சொத்துக்களைக் கொண்டு உலகின் ஏழை நாடுகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்திடலாம் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட செல்வந்தர்களின் பட்டியலை ஆய்வு செய்த "மக்களுக்கான தடுப்பூசி கூட்டமைப்பு" (பீப்பிள்ஸ் வேக்சின் அலையன்ஸ்) தெரிவிக்கிறது.
புதிய பில்லியனர்கள் பட்டியலில் பிரெஞ்சு நாட்டு வர்த்தகரும், மாடெர்னா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான ஸ்டெபேன் பான்செல் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சொத்துக்களின் இன்றைய நிகர மதிப்பு 4.3 பில்லியன் டாலர்களாகும். இவரை அடுத்து, பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவரும், அந்நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநருமான உகுர் சஹின் 4 பில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்டசொத்துக்களோடு இப்பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளார்.
மாடெர்னா நிறுவனத்தின் ஸ்தாபக முதலீட்டாளர்கள் திமோத்திஸ்பிரிங்கர் (சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர்கள்), ராபர்ட் லாங்கெர் (1.6 பில்லியன் டாலர்கள்) ஆகியோரோடு இந்நிறுவனத்தின் தலைவரான நௌபர் ஏஃபேயான் (1.9 பில்லியன் டாலர்கள்) மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ரோவி பார்மசூட்டிகல் நிறுவனத்தின் தலைவர் ஜுவான் லோபெஸ்-பெல்மோன்டேவும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களோடு சீன தடுப்பூசி நிறுவனமான கேன்சினோ பயாலஜிக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்களான ஜு டாவ் (1.3 பில்லியன் டாலர்கள்), கியூ டோங்சு(1.2 பில்லியன் டாலர்கள்), மாவோ ஹுய்ஹு (1 பில்லியன் டாலர்கள்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 9 பில்லியனர்களோடு, பிரபலமான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் மருந்து மற்றும் பயோடெக் நிறுவனங்களில் தங்களது முதலீடுகளை பரவலாகக் கொண்டுள்ள – ஏற்கனவே பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எட்டு பேருடைய சொத்துக்களும் ஓராண்டு காலத்தில் ஊதிப் பெருத்துள்ளன. இந்த எட்டுபில்லியனர்களின் சொத்துக்கள் 32.2 பில்லியன்டாலர்கள் அதிகரித்துள்ளன. இதைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்திடலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த எட்டு பேரில் இரண்டு பேர் இந்திய முதலாளிகள் ஆவர். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ஸ்தாபகர் சைரஸ் பூனாவாலா ஒருவர் ஆவார். இவரது நிகர சொத்து மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 55% அதிகரித்துள்ளது. மற்றொருவர் கோவிட்-19 நோய் சிகிச்சையில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை தயாரிக்கும் கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவரான பங்கஜ் பட்டேல் ஆவார்.இவரது சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 72% அதிகரித்துள்ளது.
தடுப்பூசிகளை தங்களது கைகளில் ஏகபோக உரிமையாகக் கொண்டு, அதிலிருந்து பெருமளவிலான லாபத்தை ஈட்டி வரும் பார்மசூட்டிகல் கார்ப்பரேட் நிறுவனங்களின் மனித முகங்களே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் என ஆக்ஸ்பாம் அமைப்பின் சுகாதாரக் கொள்கைக்கான மேலாளர் அன்னா மாரியாட் குறிப்பிடுகிறார்.
ஏழைகளுக்கு எட்டாக் கனி …
தென்அமெரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளில் சில நாட்களில் 60,000த்திற்கும் மேற்பட்டோர் கோவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். அந்த ஒரு வார காலத்தில் உலகம்முழுவதும் இந்நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இது 70% ஆகும் எனஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் "உற்பத்தி செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே இவ்வுலகில் உள்ள 29 ஏழை நாடுகளைச் சென்றடைந்துள்ளது.
அதே நேரத்தில் 87 சதவீத அளவிலான தடுப்பூசிகள் பணக்கார மற்றும் உயர்தர-நடுத்தர வருமானம் கொண்டுள்ள நாடுகளை சென்றடைந்துள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தின்போது தென் அமெரிக்காவில் மக்கள் தொகையில் 14 சதவீதத்தினரும், ஆசியாவில் 4.8 சதவீதத்தினரும், ஆப்பிரிக்காவில் 1.2 சதவீதத்தினரும் தடுப்பூசியை செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் குறைந்தது ஒரு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என ட்யூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று பல வளரும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி இரண்டு மூன்று டோஸ்கள் அனைவருக்கும் போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் நவீன தாராளமயமாக்கலும், அறிவுசார் சொத்துரிமையும், காப்புரிமைச் சட்டமும் அமலாகிய பின்னணியில், உலகளாவிய அளவில் இன்றைக்கு தடுப்பூசி விநியோகத்தில் காணப்படும் இடைவெளியானது, தடுப்பூசியிலிருந்து மக்களை ஒதுக்கி வைக்கும் நிலை நிலவி வருவதை சுட்டிக் காட்டுகிறது.
தற்போது தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வரும் முறைகளின் அடிப்படையில்பார்த்தால், தங்களது மக்களுக்கு பரவலாக தடுப்பூசியை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் ஏழை நாடுகளுக்கு குறைந்தது 2023ஆம் ஆண்டு வரை கிடைக்கப் போவதில்லை. இதன் காரணமாக உலகெங்கிலும் இந்நோய்த்தொற்று தொடர்வதோடு, மாற்று வடிவங்களில் கொரோனா வைரஸ் வளர்ச்சியடைகிற அபாயமும் நீடிக்கும் என்று ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இந்நோய்த்தொற்று உருவான பின்னர் புதிய 'தடுப்பூசி பில்லியனர்களை' வேகமாக உருவாக்க நம்மால் முடிந்தது. ஆனால், நம்பிக்கையை இழந்துள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசியை அளிக்க நாம் தவறியுள்ளோம் என ஆக்ஸ்பாம் அமைப்பின் அன்னா மாரியாட் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். "தடுப்பூசி தயாரிப்புக்கான ஆராய்ச்சிகளுக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகள் முதலாவதாகவும், முதன்மையாகவும் உலக மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, தனியார் லாப வேட்கைக்காக அல்ல" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தடுப்பூசிக் கொள்கையில் சமத்துவம்
இந்நிலையில்தான் கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளுக்கு காப்புரிமை பாதுகாப்பிலிருந்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமையிலிருந்தும் தற்காலிகமாக விலக்களிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்தது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவால் இதற்கான முன்மொழிவு உலக வர்த்தக சபையில் முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற இம்முன்மொழிவை, நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் நாடுகளும், 400க்கும் மேற்பட்டபொது சுகாதார அமைப்புகளும் ஆதரிக்கின்றன. எனினும், இங்கிலாந்து, ஜெர்மனி போன்றவளர்ந்த நாடுகள் இதனை தடுத்து வருகின்றன. இத்தகைய விலக்குகளை தான் ஆதரிப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய யூனியன் திறந்த மனதோடு இருப்பதாக பிரான்சு நாட்டின் ஜனாதிபதிஇம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ள போதும், கனடா, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் இப்பிரச்சனையில் மதில் மேல் பூனையாக உள்ளன.
அறிவுசார் சொத்துரிமை விலக்கப்பட்டால் தடுப்பூசிகளின் விலை குறையும், அதன் காரணமாக தங்களது லாபம் கடுமையான வீழ்ச்சியைசந்திக்கும் என்பதால் இத்தகைய விலக்குகளை பார்மசூட்டிகல் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி நியாயமான விலையில் கிடைக்க வேண்டுமெனில் இத்தகைய விலக்குகள் மட்டும் போதாது. ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்வபவர்களுக்கும் இந்த தடுப்பூசி மருந்தை தயாரிப்பதற்கான விவரங்களும், தொழில்நுட்பமும் பகிரப்பட வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். லாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ சமூக அமைப்பில் மக்களின் உயிர்களுக்கு மதிப்பே இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்குஇல்லாமை இல்லாத நிலை வேண்டுமெனில் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றாமல் மனித குலத்திற்கு இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடிவு இல்லை என்ற பாடத்தையே கொரோனா நோய்த்தொற்றும் கற்பிக்கிறது.
கொரோனா தொற்று நீடிக்கும் ஒவ்வொரு 24 மணி நேரமும் இந்த பார்மாசூட்டிக்கல் ராஜ்யங்களின் சொத்துமதிப்பு பல நுாறு கோடி ரூபாய் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இன்னும் எத்தனை மாதங்களுக்கு கொரோனா தொற்று நீடிக்கப்போகிறதோ? இந்த மருந்து கம்பெனிகளின் முதலாளிகள் எத்தனை லட்சம் கோடிகள் சம்பாதிக்கப்போகிறார்களோ இறைவனுக்கே வெளிச்சம்.