போலீசாரின் மனக்குமுறல் : முதல்வர் தலையிடுவாரா?
அரசு பஸ்சில் கட்டாயமாக டிக்கெட் எடுக்கச்சொல்லி போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது கடும் சிக்கலை உருவாக்கி உள்ளது.;
அரசு பஸ்ஸில் கட்டாயமாக போலீஸ்காரரை டிக்கட் எடுக்கச் சொன்னதால் போலீஸ் ராஜா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் உலா வரும் ஒரு பதிவை பார்க்கலாம்.
அனைத்து காவலர்களும் இனி பேருந்துகளில் டிக்கெட் எடுத்து சட்ட ரீதியாக பயணம் செய்வோம். அரசு அலுவலமாக ஐந்து கி.மீ., தூரம் பயணம் செய்தாலும் வாரண்ட் கேட்டு வாங்கிச் செல்வோம். அதேபோல வாரண்ட் வாங்க மறுக்கும் பேருந்து நடத்துனர்கள், செல்லாது எனக்கூறும் நடத்துனர்கள், பக்கம் தானே வாங்க சார் என கூறும் நடத்துனர்கள் என யாரையுமே விடாமல் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்புகளில் பரப்புவோம். துறைரீதியான நடவடிக்கை வேண்டி போக்குவரத்து துறைக்கு பரிந்துரைப்போம்.
அப்படித் தானே போக்குவரத்து துறையும் போக்குவரத்து தொழிலாளர்களும் செய்கிறார்கள்? அவர்களே செய்யும் போது அதை ஏன் நாமும் செய்யக் கூடாது? அவர்கள் வழியிலேயே நாமும் பயணிப்போம். நமக்கு அதிகம் ஐம்பது ரூபாய் செலவாகும். அவர்களுக்கு???
அதேபோல இனி TNSTC என போட்டுக் கொண்டு இருசக்கர வாகனங்களில் வலம் வந்து சார் சார் நான் டிரைவர் சார், கண்டக்டர் சார் வழக்கு போடாதிங்க சார் என கெஞ்சும் நபர்களையும் சாலையிலேயே நிறுத்தி வழக்கு பதிந்து அனுப்புவோம். இருநபர்கள் ஹெல்மெட் போடவில்லை எனில் 2000 ரூபாயை சட்டப்படி வழக்கு அபராத தொகையாக விதிப்போம்.
பாதிப்பேர் இன்சுரன்ஸ் இல்லாத வண்டி, RC இல்லாத வண்டியில் தான் வருகிறார்கள். அதற்கும் முறைப்படி வழக்கு பதிவோம், முடிந்தால் வாகனத்தை பறிமுதல் செய்வோம். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இனி முறைப்படி DD போடுவோம் அவர்கள் நீதிமன்றம் சென்று பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து விட்டு வரட்டும்.
பொதுமக்கள் தங்களது வாகனத்தில் Triples, ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோவில் அதிகப்படியான பயணிகளை ஏற்றி வந்தால், Tata Ace உள்ளிட்ட வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் நாம் வழக்கு பதிகிறோம் அல்லவா அதேபோல அனுமதிக்கப்பட்ட 52 பயணிகளை கடந்து அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பட்சத்தில் வழக்கு பதிவோம்.
ஓட்டை உடைசல் பேருந்துகள், ஏர் ஹாரன், நம்பர், நேம் பேட்ச் இல்லாத டிரைவர் கண்டக்டர்கள், Proper Uniform அணியாத ஊழியர்கள், அதிக வேகம், நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் புகார்கள், சிறு சிறு வாக்குவாதம் சண்டை என இனி எதையுமே விடக்கூடாது.
ஒரு காவலர் முதல்வர் சட்டசபையில் கூறியதன் அடிப்படையில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என கூறினார் என்ற சிறு காரணத்துக்காக அவரிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுத்து அதை ஊடகங்களில் பகிர்ந்து வெறும் 20 ரூபாய் டிக்கெட்டுக்காக போலீசார் அனைவரையும் அவமானப்படுத்தி துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துறைத்த போக்குவரத்து துறையின் வழியிலேயே நாமும் நமது கடமையை செவ்வனே செய்வோம்.
வாக்குவாதம் செய்யும் ஊழியர்களை நாமும் வீடியோ எடுப்போம், சாலையை மறிக்கும் ஊழியர்களை நாமும் வீடியோ எடுப்போம், தினமும் பலமுறை பேருந்தை நிறுத்தி சோதனை செய்வோம். துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துறைப்பது மட்டுமின்றி வழக்கு பதிந்து நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் அனுப்புவோம்.
அனைத்தையும் சட்ட ரீதியாக செய்வோம். நம்மிடம் இதற்கான அத்தனை அதிகாரங்களும் உள்ளது எனும்போது அவர்களுக்கு இல்லாத மனிதாபிமானம் நமக்கு மட்டும் எதற்கு? அப்புறம் இனி விபத்து என வந்து வழக்கு வேண்டாம் சார். பேசி சமாதானம் செய்து அனுப்புங்க சார் எங்க வாழ்க்கையே வீணா போயிடும் என நம் காலை பிடித்து கண்ணீர் வடிக்கும் போக்குவரத்து ஊழியர்களை அவர்களுக்கு இல்லாத மனிதாபிமானத்தை நாமும் மறந்து அவர்கள் கடைபிடிக்கும் அதே நீதி நேர்மையோடு வழக்கு பதிந்து அனுப்புவோம்.
அவர்களின் ஓய்வு ஊதியம் வரை ஏற்படும் பாதிப்புக்கு அவர்களே இனி காரணமாக இருந்துக் கொள்ளட்டும். சில ரூபாய் பணத்தை தவிர்த்து காவலர்களுக்கு எந்த இழப்பும் பெரிதாக இருக்கப் போவதில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கு தான் அதிக பாதிப்பு. அவர்களே தங்களுக்கான உற்ற தோழனாக விளங்கிய காவலர்களை பகைத்துக் கொண்டார்கள். காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை கோரினார்கள்.
ஆக இதற்கான பின்விளைவையும் அவர்களே அனுபவிக்க வேண்டும். இதை ஏதோ பழிவாங்கும் நடவடிக்கையாக கருத வேண்டாம். அவர்கள் எதிர்பார்க்கும் சட்ட அடிப்படையில் இனி நாமும் செயல்படுவோம். அதாவது காவலராகிய நாம் நம்மை நாமே திருத்திக் கொள்வோம் என்பதற்கான பதிவு இது. எங்களிடம் சங்கம் உள்ளது என போராடி வேண்டுமானால் அவர்கள் இந்த சட்டங்களை முடிந்தால் மாற்றிக் கொள்ளட்டும்.
காவலர்கள் தம் பணியை சட்டப்படி செவ்வனே செய்ய மனசாட்சியோடு மறந்ததால் வந்த வினை இது. காவலர்களை பல் இல்லாத பாம்பென நினைத்து போக்குவரத்துத் துறை மிதிக்க முயற்சிக்கிறது. அவர்கள் மிதித்தால் நாம் கொத்துவதில் எந்த தவறும் இல்லை. போக்குவரத்து துறை இயங்காமல் ஆறு மாதம் ஒரு வருடம் என முடங்கி கிடந்தது,கொரோனா கால கட்டத்தில். ஆனால் இங்கே இயல்புநிலை எதுவும் முடங்கி போய் விடவில்லை.
காவலர்களின் பணி ஒரு நிமிடம் கூட முடங்க முடியாத அத்தியாவசிய பணி. நல்ல பல போக்குவரத்து ஊழியர்களும் இருக்கிறார்கள். திமிர் பிடித்த சில தற்குறிகளால் அவர்களும் நம்மை இனி வெறுக்கக் கூடும். பாதிக்கப்படக் கூடும். என்ன செய்வது? சட்டப்படி செயல்படுவது தானே நம்முடைய பணி???
இப்படிக்கு- போலீஸ் ராஜா என்ற மெசேஜ் உலாவருகிறது. இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு முடிவு எடுத்தால் மட்டுமே இந்த மோதலுக்கு தீர்வு காண முடியும். இல்லை எனில், சிக்கல் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யும்.