நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களை முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி தொடங்கிவைக்கவுள்ளார்;

Update: 2023-10-01 04:12 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி கிராம சபை கூட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார். மாவட்டங்களில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்கள் பங்கேற்கின்றனர்

கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் அதிகளவில் பங்கேற்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு, ஊரகப் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து முன் மாதிரித் திட்டங்களின் மூலம் பயன்பெற்றோர்கள் விவரம், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் விவரம் அடங்கிய விழிப்புணா்வு பிரதிகள் ஊராட்சிப் பகுதிகளில் விநியோகிக்கப்படவுள்ளன.

குறிப்பாக, அரசின் முக்கிய திட்டங்களான மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியன குறித்த குறும்படங்கள் கிராம ஊராட்சிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், அதன் நிதி செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், சமூக தணிக்கை செயல் திட்டத்தை மக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லாத கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகிய 14 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குா் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News