'எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்': முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவிதமாக எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-25 07:40 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் வரும் 27ம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும்விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சுகாதார அதிகாரிகள், கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில், காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து வந்த ஓமிக்ரான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அந்த பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். அதேவேளை மக்களின் வாழ்வாதாரமும் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியிலும் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சமாளிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நமக்கு பெரும் சவாலாக உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால், கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

Tags:    

Similar News