வ.உ.சிதம்பரனார் 150 ஆவது பிறந்த ஆண்டினை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதலமைச்சர்
வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ஆம் தேதியைத் தியாகத் திருநாளாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150 ஆவது பிறந்த ஆண்டினை முன்னிட்டு அவர் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் கொண்ட சிறப்பு மலரை வெளியிட்டு, மின்னுருவாக்கம் செய்யப்பட்ட சிறப்பு இணையப்பக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.11.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150 பிறந்த ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். மேலும், வ.உ.சி. எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கத்தை தொடங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனார் 150-ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் 3.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட 14 அறிவிப்புகளில், "தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாகக் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்" என்பதும் ஒன்றாகும். மேலும், வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ஆம் தேதியைத் தியாகத் திருநாளாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள், அவர் தொடர்புடைய நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், ஒளிப்படங்கள் மற்றும் இதர ஆவணங்கள் போன்றவை பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு மொத்தம் 127 ஆவணங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. வ.உ.சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்ட 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள்;
வ.உ.சி. பற்றிய 20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர் குறித்த கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும் 6 பிற நூல்கள்; மேலும், வ.உ.சி. பற்றிய 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப்படங்கள், ஒளி – ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டினை முன்னிட்டு சிறப்பு இணையப் பக்கமாக (https://www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கம் பொது மக்கள் மற்றும் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், வ.உ.சிதம்பரனார் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மின்மயப்படுத்தும் முயற்சியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.