தமிழகத்தை சேர்ந்த ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநருக்கு தமிழக முதல்வர் பாராட்டு
தமிழகத்தை சேர்ந்த ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' விண்கலம் கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
இஸ்ரோவின் அடுத்த மைல்கல்லான இத்திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழர் ஒருவரே மீண்டும் தேர்வாகி உள்ளார். அதுவும் அவர் ஒரு பெண் என்பது தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை.
'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி உள்ளார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும்.
இவருடைய பெற்றோர் ஷேக் மீரான்-ஜைத்தூன் பீவி. இந்த தம்பதியின் இரண்டாவது மகள்தான் நிகர் ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர்சுல்தானா.
தமிழ்நாட்டில் பிறந்த நிகர் ஷாஜி, தற்போது இஸ்ரோவின் முக்கிய திட்டமான ஆதித்யா எல் 1 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமையடையச் செய்துள்ளார்.
இந்தநிலையில் ஆதித்யா எல் 1 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.