எண்ணூரில் 10வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
கத்திவாக்கம் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 10வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.;
சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள கத்திவாக்கம் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 10 ஆவது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 2 லட்சம் இலக்குடன் இன்று 10 ஆவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி துவக்கப்பட்ட இல்லம் தேடி தடுப்பூசி போடுவது மற்றும் மருத்துவ திட்டத்தின்கீழ் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 70 சதவிகிதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 35 சதவிகிதமும் போடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை 80 சதவிகித தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மறைந்த நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிறகு தடுப்பூசிகள் போட்டு கொள்வதில் மக்களிடம் தயக்கமும், சுனக்கமும் இருந்து வந்தது. தற்போது தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் தாங்களாக தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
தடுப்பூசி மையங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் டெங்கு, மலேரியா குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு தற்போது 500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் சிகிச்சை முடிந்து நலமுடன் விரைவில் வீடு திரும்புவார்கள்.
நம் நாடு ஜனநாயக நாடு. தடுப்பூசி போடவில்லை என்றால் தனிமை படுத்தப்படுவீர்கள் என ஆணையிடமுடியாது. பொது இடங்களுக்கு தடுப்பூசிகள் போட்டவர்கள் தான் செல்ல வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தன்னிலை அறிந்து மனசாட்சியுடன் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதனை பின்னால் சென்று கண்காணிக்க இயலாது. இந்த அரசாணைக்கு பிறகு நேற்று பல இடங்களில் பொதுமக்கள் சினிமா, மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமே என தடுப்பூசிகள் போட்டு கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகர ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.