தீபாவளியன்று கடை திறக்க அனுமதிகோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்
திருவெற்றியூரில் தீபாவளியன்று கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
தீபாவளி தினத்தன்று ஆட்டிறைச்சி கடைகள் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளிக்க வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மகாவீரர் இறந்த நாள் வருவதால் ஆட்டு இறைச்சி கடை மற்றும் மாமிச கடைகளை திறப்பதற்கு மாநகராட்சி சார்பாக தடை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை கடை வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருடத்தில் ஒருநாள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் 90% பேர் இறைச்சிகளை வாங்கி கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
இறைச்சி வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும் என்பதால் அன்று வியாபாரிகளுக்கு கடை திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தி திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலர் அவர்களை சந்தித்து மனு அளிக்க இறைச்சி வியாபாரிகள் வந்தனர்.
ஆனால் அதிகாரிகள் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் காவல் துறையினர் உடனடியாக வந்த அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ஏற்கனவே பேரிடர் காலத்தில் வியாபாரம் இல்லாமல் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இது போன்ற பண்டிகை நாட்களில் வியாபாரத்தை வைத்து தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.