தமிழகத்திற்கு 11,76,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விமானத்தில் வந்தன
தமிழகத்திற்கு 11 லட்சத்து 76 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் வந்தன.
தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது.அதோடு தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும்,24 மணி நேரமும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வசதிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மிகமூத்த குடிமக்களுக்கு அவரவா் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை போடுவது போன்ற புதிய திட்டங்களையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
அதோடு தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்படுவதால்,மாணவா்கள்,ஆசிரியா்கள்,ஊழியா்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை அதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா்.நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.இதையடுத்து தமிழ்நாடு அரசு,மத்திய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பும்படி கோரிவருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று,மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்த 11,76,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 11,76,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 98 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு,இன்று பகல் 12 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது. உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அந்த தடுப்பூசிகளில் 11,55,170 டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாடு அரசுக்கு வந்தது.
எனவே அந்த 11,55,170 தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.மீதி 20,830 தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்தன.எனவே அவைகளை தனியாா் மருத்துவமனைகளிடம் ஒப்படைத்தனா்.