மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கோயில் அதிகாரி மீது அர்ச்சகர்கள் புகார்
மாமல்லபுரம் தலசயன பெருமாள்கோயில் பாலாலய விழாவில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என அர்ச்சகர்கள் புகார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீலசயன பெருமாள் கோயில் 108 வைணவ திவ்வியத்தலங்களில் 63-வது ஸ்தலமாகும். 20 வருடங்களாக திருப்பணி நடைபெறாமல் இருந்த இக்கோயிலை திருப்பணி நடத்தி, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து திருப்பணிகள் வேலைகள் தொடங்குவதற்காக கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 21- ந்தேதி வரை 3 நாட்கள் பாலாயம் நடந்து சிறப்பு யாகங்கள் நிகழ்த்தப்பட்டு இக்கோயில் கருவறை மூடப்பட்டது. பாலாலய யாககுண்டம் நிகழ்த்திய 65 அர்ச்சகர்களுக்கும் 3 நாட்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் கோயில் நிர்வாகம் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது பாலாயம் முடிந்து 1½ மாதம் ஆகியம் அர்ச்சகர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம் தொகை 4.50 லட்ச ரூபாயை கோயில் நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று கோயில் திருப்பணி செய்யும்போது என்னென்ன சிற்பங்கள் அமைப்பது, கோயில் கோபுரத்தை ஆகம விதிப்படி எப்படி கட்டுவது என்பது குறித்து மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுடன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் தலசயன பெருமாள் கோயிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் கோயில் திருப்பணிக்காக பாலாலய விழா நடந்து 1½ மாதம் ஆகியும் 3 நாட்கள் யாககுண்டம் நிகழ்த்திய 65 அர்ச்சகர்களுக்கு பேசப்பட்ட ஊதிய தொகை மொத்தம் 4.65 ரூபாயை வழங்காமல் பலவித காரணங்களை கூறி கோயில் நிர்வாகம் தங்களை ஏமாற்றி வருவதாக வருவதாக அர்ச்சகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
3 நாட்கள் யாக குண்ட நெருப்பில் உழைத்த தங்களுடைய ஊதியத் தொகையை முறைகேடு செய்துவிட்டார்களா? என்று தாங்கள் ஆய்வு செய்து எங்களுடைய ஊதிய தொகையினை பெற்றுத்தர வேண்டும் என்று அனைத்து அர்ச்சகர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் கோயில் நிர்வாக அதிகாரியை அழைத்து பாலாலய யாக குண்டம் நடத்திய அர்ச்சகர்களுக்கு வழங்க வேண்டிய தொகை கையாடல் செய்யப்பட்டதா என அவரிடம் விசாரித்தனர்.
கோயில் நிர்வாகத்தினர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் கடுமைய எச்சரித்த அவர், அர்ச்சகர்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 4.50 லட்சத்தினை உடனடியாக வழங்கவேண்டும் என்றும், கோயில் திருப்பணிக்காக நன்கொடையாளர்களிடம் பணம் பெறும்போது, கோயில் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலமே பணம் பெற்வேண்டும் என்றும், ரசீது மூலம் பணம் பெறக்கூடாது அப்படி போலி ரசீது மூலம் நன்கொடையாளர்களிடம் பணம் பெறும் தகவல் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் கோயில் மேலாளரை எச்சரித்துவிட்டு சென்றார். கோயில் திருப்பணிக்காக ஆய்வுக்கு வந்த இணை ஆணையரிடம் கோயில் நிர்வாக அதிகாரி, கோயில் மேலாளர் மீது கோயில் அர்ச்சகர்கள் கூறிய புகாரால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே இக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவரினப் பெண் கோயில் நிர்வாகத்தால் அவமானப்படுத்தி வெளியேற்றப்பட்ட சம்பவம் தமிழக அளவில் சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயில் அர்ச்சகர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளதா என இந்து சமய அறிலையத்துறை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.