சுனாமி நினைவு தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வலியுறுத்தல்
சுனாமி நினைவு தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென இந்திய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி கல்பாக்கம், புதுப்பட்டினம் குப்பம், சதுரங்கப்பட்டினம் போன்ற பகுதிகளில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஏராளமானோர் வீடுகளையும் தங்களது உடைமைகளையும் இழந்து தவித்து வந்தனர் இந்த தினம் ஆண்டுதோறும் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது,
அதன் ஒரு பகுதியாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கடலில் பால் ஊற்றி பின்பு அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்,
இதனைத்தொடர்ந்து, இந்திய மீனவர் பேரவை தலைவர் தயாளன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இந்த சுனாமி நினைவு தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும், மன்னார் வளைகுடாவில் உள்ள இருபத்தி ஒரு தீவுகளில் மீனவர்கள் சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். படகுகளை நிறுத்த அனுமதிக்க வேண்டும் அதற்காக 21 தீவுகளையும் மீனவர் வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தலையில் மீன் சுமந்து சாலையோரம் விற்பனை செய்யும் பெண்களுக்கு கழிப்பறைகளை அரசு கட்டித்தர வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீனவர்களுக்கு 50% சிறப்பு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்