விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட்
இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் இன்று மாமல்லபுரம் அருகே விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.;
மாமல்லபுரம் அருகே இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது
முன்மாதிரி திட்டத்திற்கு 85 சதவீத நிதியுதவியை மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது நாடு முழுவதும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக (PICO) செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது .இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ஐ.எஸ்.ஏ.சி) மற்றும் இந்திய ரிமோட் சென்சிங் மற்றும் சிறிய ரக, அறிவியல் மற்றும் மாணவர்களுக்கான செயற்கைகோள்கள் (IRS&SS$} திட்ட இயக்குநருமான பத்மஸ்ரீ ஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை , ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் மேசுலிங்கம் மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை- ஹவுஸ் ஆஃப் கலாம், ராமேஸ்வரம் நிர்வாக அறங்காவலர் ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர் அப்துல் கலாம் பேரன்களான அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை. ஹவுஸ் ஆஃப் கலாமின் இணை நிறுவனர்களான ஏ.பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் தாவூர். ஏ.பி.ஜெ.எம்.ஜெ ஷேக் சலீம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் சவுண்ட் ராக்கெட் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. மேலும் வெவ்வேறு பே லோட்களை கொண்ட சிறிய ரக 150 செயற்கைக் கோள்களும் தயாரிக்கப்பட்டன.
இத்துடன் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் மறு பயன்பாட்டு ராக்கெட் (reusable rocket) தயாரிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர். சவுண்ட் ராக்கெட்டில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைக் கோள்களில் இருந்து வானிலை மற்றும் வளிமண்டல நிலை மற்றும் கதிர்வீச்சு தன்மை குறித்து ஆராய்ச்சி தகவல்களை பெற முடியும்.
இந்தியா முழுவதும் இருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் கிடைக்கும் அரிய வாய்ப்பில் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களும், இந்தியா முழுவதும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 60 பழங்குடியின மாணவர்களும் அடங்குவர்.
மும்பை மாநகராட்சி 20 மாணவர்களையும், நாக்பூர் மாநகராட்சி 10 மாணவர்களையும் அளித்தன. மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தின் ஐ.ஏ.எஸ் திருமதி ஆஞ்சல் சூட்கோயல் 50 அரசு பள்ளி மாணவர்களை வழங்கினார்
மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் பற்றியும் கற்றுக் கொண்டனர்
தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனும் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக மார்ட்டின் அறக்கட்டனை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அரக்கட்டனை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தை வெகுவாகப் பாராட்டினார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் கூறியதாவது:-
செயற்கைக்கோள் சார்ந்த தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவ சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேவேளையில் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் விண்ணில் ஏவியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கனவு இந்த சாதனையை நிஜமாக்கி உள்ளது. உலக அரங்கில் இந்தியா விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது எனவே ஆர்வமிக்க துடிப்புமிக்க இளைஞர்கள் இந்த துறைக்கு அதிகளவில் வர வேண்டும்/
இவ்வாறு அவர் பேசினார்.