கல்பாக்கத்தில் உணவு வணிகர்களுக்கான உரிமம் பதிவு சான்று வழங்கும் முகாம்
கல்பாக்கத்தில் உணவு வணிகர்களுக்கான எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பதிவுச் சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் புதுப்பட்டினம் வணிகர் சங்கம் ஏற்பாட்டில் வட்டார உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர் உரிமம் பதிவு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
முகாமிற்கு புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவர் எம். காதர் உசேன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுகுமார் வரவேற்றார். வணிகர் சங்க துணை தலைவர் கிங் உசேன்,பொருளாளர் பாபுலால் சேட் , துணை செயலாளர்கள் சம்சு கனி, முருகன், எலக்ட்ரிகல் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட வணிகர்கள் கலந்துக் கொண்டனர்.
இம்முகாமில் உணவு பாதுகாப்பு துறையின் திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வி. ஜி. பிரபாகரன் கலந்துக் கொண்டு உணவு பாதுகாப்பின் அவசியங்கள் குறித்தும், வணிகர் உரிமம் மற்றும் பதிவு செய்தல் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில் சாலையோர கடைகள், உணவு சார்ந்த நடை பாதை கடைகள் முதல் பெருவணிக கடைகள் வரை உரிமம் மற்றும் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும் என்றும், டீ தூள்களில் கலப்படம் செய்ய கூடாது, சமையல் எண்ணெய்களை மறுசுழற்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது. நிறமிகளை (கலர் பவுடர்) உணவுகளில் கலக்கக் கூடாது. பான்பராக் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், அனைத்து உணவு வணிகர்களும் அவர்தம் குடும்பத்தாரும் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறினார்,
உணவு வணிகர் உரிமம் மற்றும் பதிவுகள் இ-சேவை மையம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் அவசியம் எனவும் அதற்கு வணிகர்கள் அவர்களுடைய ஆதார் கார்டு நகல், வாடகை கடையாக இருந்தால் வாடகை ஒப்பந்த ஆவண நகல் வைத்திருத்தல் அவசியம் என்று கூறினார்.