திருக்கழுக்குன்றம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.அச்சத்தில் கிராமமக்கள் உள்ளனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவரது ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அன்று மாலை வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் வெடிபொருளாக இருக்கலாம் என கருதி அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன் அந்த மர்மபொருளை பார்வையிட்டார். அந்த பொருள் அதி நவீன வெடிபொருள் போன்று மூன்று அடி நீளத்திலும், சுமார் 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ்பசேரோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இது குறித்த தகவல் ஊருக்குள் தீயாய் பரவியதும் கிராம மக்கள் அப்பகுதியை நோக்கி படையெடுத்தனர். ஆனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
மேலும் எதற்குரிய பொருள் என்பதை கண்டறியமுடியவில்லை. இதையடுத்து அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த மர்ம பொருள் முழுவதும் எலக்ட்ரானிக் பட்டன்களால் ஆனவை என்பதால் கப்பல்படையினர் சிக்னலுக்காக பயன்படுத்தும் கருவியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.