கல்பாக்கம் அணு சக்தி துறை சார்பில் அவசர நிலை ஒத்திகை

கல்பாக்கம் அணு சக்தி துறை சார்பில் அவசர நிலை ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-06 11:00 GMT

கல்பாக்கத்தில் அவசர நிலை ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணு மறுசுழற்சி நிலையம், முன்மாதிரி அதிவேக ஈனுலை, மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையப் பிரிவுகள் உள்ளன.

அவசர கால தயார் நிலை திட்டத்தின்படி, மையம் தாண்டிய அவசர நிலை ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன் முந்தைய ஒத்திகை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடந்தது. இந்த ஒத்திகை பயிற்சி வரும் வியாழக்கிழமை 11 நவம்பர் 2021 அன்று நடத்தப்பட உள்ளது.

கடந்த ஒத்திகையை போன்றே, இந்த முறையும் அவசர நிலை ஒத்திகை 'ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு' என்ற முறையில் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்களை பாதிக்காத இந்த ஒத்திகையின் நோக்கம் அணு சக்தி துறை மற்றும் மாவட்ட அரசு அலுவலர்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதம் இவற்றை பரிசோதிப்பதாகும்.

அவசர நிலை திட்டத்தின் தலைவரான, செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஆட்சியர், ராகுல்நாத், இந்த ஒத்திகையை முன்னின்று நடத்துவார்.

சென்னை அணு மின் நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி தலைமையில் இயங்கும் கல்பாக்கம் அவசரநிலை குழு, இதற்கு தொழில் நுணுக்கம் சார்ந்த உதவிகள் அளிக்கும். இந்த ஒத்திகையின் பொருட்டு, அவசர நிலை திட்ட விழிப்புணர்வு பயிற்சி மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 27/10/2021 முதல் 02/11/2021 வரை கொடுக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் காவல், வருவாய், சுகாதாரம், மருத்துவத்துறை, விவசாயம், கால்நடை, தீயணைப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலிருந்து சுமார் 150 பேர் பங்கேற்றனர்.

இந்த ஒத்திகை, கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்தின் அவசர நிலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள வரைமுறைகளின்படி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் அரசு அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அடையாளமாக செயல்படுத்துவார்கள்.

பொதுமக்கள் வாழ்க்கை மற்றும் வாகனப் போக்குவரத்து இந்த ஒத்திகையின் போது பாதிக்கப்படாது. அலுவலர்களின் செயல்பாடுகள் மட்டும் பார்வையிடப்படும்.

அணுமின் நிலையம் வடிவமைப்பது மற்றும் செயல்பாடுகளில் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால், அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவாக இருந்தாலும், அது போன்ற நேரத்தில் மாவட்ட நிர்வாகமும் அணுசக்திதுறை நிர்வாகமும் கடைப்பிடிக்க வேண்டிய தயார் நிலையை சோதனை செய்து பார்ப்பதுதான் இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

இந்த ஒத்திகையின்போது, சென்னை அணு மின் நிலையத்தில், குறுகிய காலத்திற்குள் ஒரு நிகழ்வு நடந்தது போல் பாவிக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகள் அதற்கு தகுந்தபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். இந்த ஒத்திகையை பார்வையிடுவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய அணுமின் கழகம், பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் வருகின்றனர்.

Tags:    

Similar News