படிப்பு வேண்டாம், பக்தி போதும்: கல்பாக்கம் அருகே அரசுப் பள்ளியில் தான் இந்த நிலை
கல்பாக்கம் அருகே அரசுப் பள்ளியின் சுற்று சுவரை இடித்து சிவன் கோயில் கட்டி வரும் தனிநபரிடமிருந்து பள்ளியை மீட்டுத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை;
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுமார் 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது அப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தின் ஓரத்தில் சிறிய அளவிலான பாழடைந்த சிவலிங்கம் ஒன்று இருந்துள்ளது அதனால் எந்த பாதிப்பும் இல்லாததால் அதனை யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை
ஆனால் தற்போது அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் பல இடங்களில் பணம் வசூல் செய்து ஆலயத்தை பெரியதாக கட்டுவதாக கூறி பள்ளியின் சுற்று சுவரை இடித்து சிவன் ஆலயம் கட்டி வருவதுடன், கோவிலின் விசேஷ நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடுங்கள், ஸ்வாமிக்கு பூஜை செய்ய வேண்டும், பாலபிஷேகம் செய்ய வேண்டும் என அடிக்கடி பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளார்,
இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஆலயப் பணிகள் நடைபெற்று வருவதால் கற்களை அரைக்கும் எந்திரங்கள் மற்றும் துளை போடும் இயந்திரங்களின் சத்தத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
மேலும் அதே வளாகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசால் நூலக கட்டிடம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் படிப்பதற்காக ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்துள்ளன. அந்த நூல்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அந்தக் கட்டிடத்தை கோயில் பணி செய்யும் ஆட்கள் தங்கும் இடமாக மாற்றியுள்ளனர்
மேலும் அந்த இடத்தில் கோயில் கட்டி முடித்தால் விசேஷ காலங்களில் மேளதாள சத்தங்கள் ஒலிபெருக்கி சத்தங்கள் மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும் எனக்கருதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உமா சங்கர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அருள், சுகுமார், முருகன் ஆகியோர் இணைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு பள்ளி தேவையில்லை கோயில் தான் வேண்டும். உங்களால் என்ன செய்ய முடியுமா செய்து கொள்ளுங்கள் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
இதற்கு தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அப்பகுதி துணைத்தலைவர் ரமேஷ் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தர்மகர்த்தா ராஜ்பிரகாஷ் அனைவரும் கோவில் நிர்வாகத்திற்கு உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.