திருக்கழுக்குன்றம் சிறுமி மரணத்தில் மூன்று இளைஞர்களிடம் தீவிர விசாரணை..!
திருக்கழுக்குன்றம் அருகே 11 வயது சிறுமி உடலில் காயங்களோடு சடலமாக மீட்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கணேசன் இவர் இதே பகுதியில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவருக்கு பதினோரு வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி சென்றுள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். அவர் எங்கும் கிடைக்காததால் சட்ராஸ் காவல்நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்தார், நேற்று மாலை முதல் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு சிறுமி மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரனையில் ஈடுபட்டார். அப்போது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் உரைந்த இரத்த படிவங்கள் இருப்பதாகவும், இது குறித்து மூன்று இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.