திருக்கழுக்குன்றம் அருகே 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: காவல்துறை விசாரணை

திருக்கழுக்குன்றம் அருகே 11 வயது சிறுமி மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-06-30 05:00 GMT

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கணேசன் இவர் இதே பகுதியில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவருக்கு பதினோரு வயதில் மகள் உள்ளார். இவர் இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகாமையில் சிறுமியின் அண்ணன் நடத்திவரும் இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி சென்றுள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சிறுமியை தேடியுள்ளனர். அவர் எங்கும் கிடைக்காத காரணமாக சட்ராஸ் காவல்நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. நேற்று மாலை முதல் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு சிறுமி மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News