பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்
பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 1,04,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு, காஞ்சிபுரத்தில் பாலாறு வழியாக தடுப்பணைகள் நிரம்பி வழிந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்ககிறது. எதிர்பாராத வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அதிகாரிகள் படகுகளில் சென்று, பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலாற்று வெள்ளம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 1903 ஆம் ஆண்டுக்கு பிறகு, இப்போது தான் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 1903-இல் வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1,25,00 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது சற்று குறைவாக 1,04,000 கன அடி நீர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி பகுதியில் இருந்து கணக்கிடும் போது விநாடிக்கு 1,25,000கன அடிநீர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.