விளையாட்டு வினையானது: பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்
பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கால்கள் அகற்றம் .
பேருந்து படியில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரித்தாலும் கேட்பதில்லை. பொதுமக்கள் கூறினாலும் அவர்களுக்கு பூமர் அங்கிள் என பெயர் சூட்டுவது என மாணவ சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டு தற்போது வினையாகி ஒரு மாணவன் தனது இரு கால்களையும் இழந்துள்ளார்
சென்னை குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சந்தோஷ். . இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். சந்தோஷ் பஸ்சின் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்துள்ளார்.
பேருந்து குன்றத்தூர் தேரடி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக சந்தோஷ் முன்பக்க படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பேருந்தின் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இரு கால்கள் மீதும் ஏறியுள்ளது. இதில் சந்தோஷின் கால்கள் நசுங்கின.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மாணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன.
தற்போது முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு வினையாக மாறி அந்த மாணவனின் எதிர்காலமே வீணாகி விட்டது. இதனை பார்த்தாவது மாணவ சமுதாயம் திருந்துமா?