தென்மாவட்டத்தில் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தென்மாவட்டத்தில் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
எழும்பூரிலிருந்து இயக்கப்படாத ரயில்கள் பற்றிய விவரம்: மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மங்களூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூா் சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
வெளிமாநில ரயில்கள்: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கூடூா் வழியாக இயக்கப்படவுள்ளன.
இதில் புதுச்சேரி- புதுதில்லி விரைவு ரயில் மற்றும் ராமேஸ்வரம்- பனாரஸ் விரைவு ரயில் ஜூலை 24, 31ம் தேதிகளிலும், திருச்சி- பகத் கி கோதி ஹம்சாபா் விரைவு ரயில் மற்றும் மும்பை- காரைக்கால் விரைவு ரயில் ஜூலை 27-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும். மேலும், மதுரை- பிகானோ் விரைவு ரயில் ஜூலை 21-ஆம் தேதியும், ராமேஸ்வரம்- அயோத்யா கண்டோன்மென்ட் விரைவு ரயில் ஜூலை 28-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும்.
ஹைதராபாத்- தாம்பரம் சார்மினார் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரையும், சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22, 29 தேதிகளிலும் சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக கடற்கரையிலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.
தொடா்ந்து ஆக.1-ஆம் தேதிக்கு பின் ரயில் சேவையின் மாற்றம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் எழும்பூருக்கு வராது என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை.