மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-24 11:15 GMT

தலைநகர் டெல்லியில் உள்ள மின்உற்பத்தி நிலையம்

நாட்டின் மின்சாரத் தேவை தற்போது பெருமளவில் அனல் மின் நிலையங்களின் மூலமாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 மெட்ரிக் டன் அளவுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரி இருப்பில் உள்ளது.

கடந்த சில  நாட்களாக தமிழகம் முழுவதுமே இரவு நேரங்களில் 3 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அதற்கு நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும் முக்கிய காரணம். கோடை காலம் துவங்கி விட்டதால், தற்போதைய மின் தேவை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தற்போது போதிய நிலக்கரி இருப்பு கையில் இல்லாததால், தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி வாங்க வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதனை சமாளிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில், தற்போது மின் கட்டணமும் உயரப்போகிறது என்ற தகவல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Tags:    

Similar News