வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!

வறட்சியின் பாதிப்பு காரணமாக கால்நடைகள் உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது.

Update: 2024-05-05 07:07 GMT

புல்வெளிகளில் மேயும் கால்நடைகள் (கோப்பு படம்)

நீலகிரி புலிகள் காப்பகம் அருகேயுள்ள மசினகுடி- சிங்காரா சாலையில் நேற்று 40 நாட்டு பசு மாடுகள் வறட்சியின் காரணமாக உணவு, நீரின்றி இறந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மசினகுடியைச் சுற்றியுள்ள ஆனைக்கட்டி, மாவனல்லா, மாயாறு, வாழைத்தோட்டம் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 மாடுகளை கிராம மக்கள் வளர்த்து வருகின்றனர். கடந்த  மூன்று மாத வறட்சியால் 500 மாடுகள் வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்,  வெப்ப அலையால் கடும் பாதிப்பைச் சந்தித்து வறண்டுள்ளது. கர்நாடகாவில் கிடைக்கும் பச்சைப் புல்லிற்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

சென்ற மாதம் மசினகுடியைச் சேர்ந்த பொது மக்களும், நாம் தமிழர் கட்சியினரும் மாவட்ட ஆணையரைச் சந்தித்துக் கால்நடைகளுக்கு நீரையும் உணவையும் உறுதி செய்யக் கோரும் பொழுது, மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து நிதிப்பற்றாக்குறை உள்ளது என்ற பதிலே கிடைத்துள்ளது. கடுமையான வெப்ப அலையை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், மக்களுக்கும் வன விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தரவேண்டிய அரசும் நிர்வாகமும் நிதிப் பற்றாக்குறை என்று மெத்தனமாகக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது நிகழ்ந்துள்ள கால்நடை உயிரிழப்பிற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முழுப் பொறுப்பை ஏற்று, நீலகிரி வனப்பகுதியிலுள்ள வன உயிர்களின் நிலையை விரைந்து மேற்பார்வையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுத் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. மலைப்பிரதேசங்களிலேயே இப்படி கடுமையான பாதிப்பு நிலவும் போது, வெப்ப அலை வீசும் வட மற்றும் உள்மாவட்டங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News