முன்னாள் டிஜிபி மீது வழக்கு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் டிஜிபி மீதும், தனியார் தொலைகாட்சிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி மீதும், தனியார் தொலைகாட்சிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று பேசிவிட்டு ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் அதிமுக ஐடி விங்கை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணய குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.
காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.