ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அண்ணாவின் கொள்ளு பேத்தி..!
அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதோடு, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை மணக்க இருக்கிறார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதோடு, தேசிய அளவில் 171-வது இடம் பிடித்து பாராட்டுகளைக் குவித்தவர் அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி. இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் விருப்பம் கொண்ட பிரித்திகா ராணி, தற்போது ஸ்பெயினில் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ்-ஸை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது நெருங்கிய உறவினர்களிடம் பேசிய போது,
இது காதல் திருமணம். பிரித்திகாவின் வருங்கால கணவர் சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ். திருச்சி என்.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு, கடந்த 2020-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 155-வது இடம் பிடித்தவர்.
அவரது அம்மா, அப்பா, சகோதரி அனைவருமே மருத்துவர்கள். சித்தார்த் பழனிசாமியும் பிரித்திகா ராணியும் சிவில் சர்வீஸ் பயிற்சியின் போது நட்பாகி காதலர்களாகியிருக்காங்க. இப்போ, சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ் ராஜஸ்தானில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பிரித்திகாவுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைக்கவே, இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்து நிச்சயதார்த்தத்தை நடத்தியிருக்காங்க. சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. வரும் நவம்பர் மாதம் மதுரையில் திருமணம் நடக்க இருக்கு” என்கிறார்கள்.
தனது சகோதரியின் மகனான பரிமளத்தை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து வளர்த்தார் அண்ணா. அந்த பரிமளம் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார். இந்தத் தம்பதியின் மூத்த மகள்தான் பிரித்திகா ராணி. சிவில் சர்வீஸ் தேர்வில் பிரித்திகா ராணி வெற்றி பெற்றதும் முதல் ஆளாக வாழ்த்துகளைத் தெரிவித்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். திருமணமும் முதலமைச்சர் தலைமையில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”கல்லூரி படிக்கும்போது காந்தி, அம்பேத்கர் புத்தகங்கள் படித்ததால் இந்தச் சமூகத்தைப் பற்றிய தெளிவும் புரிதலும் ஏற்பட்டது. அதனால் சமூகத்திற்கு என் பங்களிப்பை கொடுக்கவே சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றேன்” என்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற போது சித்தார்த் பழனிசாமி தெரிவித்திருந்தார்.