பிஎப் 7 வகை கொரோனா தொற்று: அச்சப்பட தேவையில்லை
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.;
சமீபகாலமாக சீனாவில் பிஎப் 7 வகை கொரோனா பரவி பெரும் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என சமூக ஊடகங்கள் மட்டுமின்றி பிற ஊடகங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன.
வழக்கம் போல் இந்த தகவல்களுக்கு சீனா பதில் சொல்லவில்லை. மாறாக தங்கள் நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. சீனா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கூட கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் கொரோனா தொற்றுடன் வாழப்பழகி விட்டனர். கொரோனா ஒன்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சப்படக்கூடிய நோய் இல்லை எனவும் சீனா அறிவித்துள்ளது.
அதேபோல் சீனாவை ஒட்டியுள்ள இந்தியா, தைவன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், ஜப்பான், இந்தோனேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் பெரிய அளவில் இல்லை. பாதிப்புகளும் இல்லை.
இங்கிலாந்தும் முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதோடு, மக்கள் கொரோனாவுடன் வாழப்பழகி விட்டனர் என அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிஎப்7 வகை கொரோனா பரவினாலும் அங்கும் உயிரிழப்புகள் அதிகம் இல்லை.
சீனாவில் வசிக்கும் தென்தமிழகத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களிலும், அனைத்து மீடியாக்களிலும் வைரலாகி வருகிறது. அந்த வாலிபர், தான் 50 நாட்களுக்கு மேல் சீனாவில் தங்கியிருப்பதாகவும், சீனாவில் நிலைமை சகஜமாக உள்ளது. இங்கு ஊடகங்களில் பரப்பப்படுவதை போல் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கூட ஓரிரு நாளில் சரியாகி விடுகின்றனர். உயிரிழப்புகளும் பெரிய அளவில் இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. ஊடகங்களில் பழைய வீடியோக்கள் வெளியாகி வருகின்றனர். இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை என கூறியுள்ளார்.
இதனையே இந்திய மருத்துவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து இந்திய மருத்துவர்கள் கூறுகையில், சீனாவில் பலர் தடுப்பூசி போடவில்லை. தவிர கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தொற்று பாதிப்பு காணப்படுகிறது. இதுவும் பெரிய பாதிப்பை எல்லாம் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் போடப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் வகை தடுப்பூசிகள் வீரியம் மிகுந்தவை. இதனை 90 சதவீதம் மக்கள் இரண்டு டோஸ் போட்டுள்ளனர். 23 கோடிப்பேர் மூன்று டோஸ் போட்டுள்ளனர். தவிர கொரோனாவிற்கு எதிரான இயல்பான எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது. எனவே மக்கள் எக்காரணம் கொண்டும் அச்சப்பட தேவையில்லை.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் போதுமானது. பாதிப்பு ஏற்பட்டாலும் முழுமையான சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக, மிக குறைவு. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக்கூறி உள்ளனர்.