வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கலைஞர்கள்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து, ஒருவேலை உணவுக்கு கஷ்டப்படும் கிராமிய இசை நாடக கலைஞர்கள்.!

Update: 2021-04-15 07:24 GMT

கொரோனாவை விட கொடியதாக உள்ளது மத்திய, மாநில அரசுகளின் திறமையற்ற செயல்பாடுகள் என கொரோனா தடையால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நாட்டுப்புற கிராமிய இசை நாடக கலைஞர்கள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பது சாதாரண ஏழை எளிய மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலாகவே இருந்துவருகிறது. கடந்தாண்டு மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுத்திட பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேலை உணவுக்கு அடுத்தவர்களை நம்பி கிராமிய இசை நாடக கலைஞர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


மத்திய, மாநில அரசுகள் பொது சுகாதாரத்துறையில் காட்டிய அலட்சிய போக்கையும், திறமையற்ற நிர்வாகத்தையும் திசை திருப்ப கொரோனா இரண்டாவது அலை என்ற பெயரில் கொரோனா தொற்று குறித்த அரசால் நிர்ணயிக்கப்படும் புள்ளிவிவரத்தை வெளிகாட்டி அதன்பேரில் கோயில் திருவிழாக்கள் ரத்து, திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும், இறப்பு நிகழ்ச்சியில் 50 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதன் மூலம் நடப்பாண்டிலும் தொழிலை மேற்கொள்ள வழியின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மனவேதனையுடன் நாட்டுப்புற கிராமிய இசை நாடக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

திறமையற்ற நிர்வாகத்தை கையாலும் மத்திய, மாநில அரசுகளை நம்பி இனியும் பலன் இல்லை எனவும், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என இக்கலைஞர்கள் தன்னம்பிக்கையை இழந்து தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டுப் புற நடன கலைஞர்களின் மாவட்ட தலைவரான வேளுகுடியைச் சார்ந்த ரமேஷ்குமார், தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எதிர்பார்ப்பது குறித்து கூறுகையில்,


திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1000க்கு மேற்பட்ட நாட்டு புற கலைஞர்கள் இருக்கிறார்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த ஊரடங்கிலும் கோயில் திருவிழா நிகழ்ச்சி ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால் கிராமிய பாடகர்கள், நாடக கலைஞர்கள், நாட்டு புற நடன கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தாண்டாவது நாட்டு புற கரகாட்ட கலைஞர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி நாட்டு புறகலைஞர்களின் வாழ்வாதத்தை பாதுகாக்க திருவிழாக்களில் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags:    

Similar News